புதுச்சேரியில் ஜூன் 30-ல் திருமலை திருப்பதி சீனிவாச திருக்கல்யாண உற்சவம்


புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் வரும் ஜூன் 30-ல் திருமலை திருப்பதி சீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது. அனைவருக்கும் திருப்பதி லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது என்று ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட் தலைவரும், அமைச்சருமான லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறியது: ''திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண உற்சவ திட்டம் மற்றும் புதுச்சேரி ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட் ஆகியவை இணைந்து வரும் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் ஸ்ரீவாரி சீனிவாச திருக்கல்யாண உற்சவத்தை நடத்துகின்றனர். இந்த கல்யாண உற்சவத்தை 6-வது முறையாக புதுச்சேரியில் நடத்துகின்றோம். கலந்து கொள்ளும் அனைவருக்கும் அனுமதி இலவசம்.

தமிழகம் உள்ளிட்ட எங்கும் 6 முறை நடத்திய வாய்ப்பு கிடைக்கவில்லை. புதுச்சேரியில் மக்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த திருக்கல்யாண உற்வசத்தில் திரளானோர் கலந்து கொண்டு சாமியின் அருளைபெற கேட்டுக்கொள்கின்றோம். 29-ம் தேத இரவே உற்சவர் திருமலையிலிருந்து புதுச்சேரி வந்தடைகின்றனர். லாஸ்பேட்டை விவேகானந்தா மேனிலைப்பள்ளி வளாகத்தில் வரும் 30-ம் தேதி காலை 7 மணியில் இருந்து சுப்ரபாதம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கும், அபிஷேகமும் நடைபெறும்.

பக்தர்கள் மாலை 3 மணி வரை தரிசனம் செய்யலாம். அதன்பிறகு உற்சவர் ஹெலிபேடு சென்றடைவார். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு கல்யாண உற்சவம் தொடங்கி நடக்கிறது. இதில் துணைநிலை சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர், சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினரும் பங்கேற்கின்றனர். புதுச்சேரியில் நடக்கும் திருக்கல்யாண உற்சவத்துக்கு பேருந்து நிலையத்திலிருந்து ஹெலிபேடு மைதானத்துக்கு இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்படுகிறது.

விஐபிக்களுக்கு பேருந்து வழங்கப்படும். 15 ஆயிரத்துக்கும் மேல் இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. அனைவருக்கும் திருப்பதி லட்டு வழங்கப்படுகிறது. மேலும் மாங்கல்ய சரடு மற்றும் பிரதாசம் உள்ளிட்டவையும் வழங்குகின்றோம். கடந்த முறை 25 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டனர். எனவே பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமியை தரிசிக்கலாம்.” என அமைச்சர் கூறினார்.