[X] Close

நரசிம்ம ஜயந்தியில் வழிபடுவோம்! வீரமும் தெளிவும் தருவார் நரசிம்மர்!


narasimma-jayanthi

  • வி.ராம்ஜி
  • Posted: 28 Apr, 2018 14:24 pm
  • அ+ அ-

நரசிம்ம ஜயந்தித் திருநாளில், அவரை மனதார வழிபடுவோம். முடிந்தால், அவருக்குப் பிடித்த பானக நைவேத்தியம் செய்து வணங்கி, எல்லோருக்கும் விநியோகிப்போம். நமக்குள் வீரத்தையும் மனத்தெளிவையும் காரியத்தில் வீரியத்தையும் தந்தருள்வார் நரசிம்மர்.

பெருமாளின் அவதாரங்களில், நரசிம்ம அவதாரத்துக்கு தனித்த அடையாளமும் பெருமையும் உண்டு. இரணியன் மிக சாமர்த்தியமாக  வரம் வாங்கி வைத்திருந்தான். அதாவது, என்னைக் கொல்பவர் மனிதனாகவும் இருக்கக்கூடாது; மிருகமாகவும் இருக்கக் கூடாது. ஆயுதம் ஏந்தியிருக்கக்கூடாது. காலையாகவும் இரவாகவும் இருக்கக் கூடாது. வீட்டுக்குள்ளேயோ வெளியிலேயோ என்னைக் கொல்லக் கூடாது என்று இருதரப்பு விஷயங்களையும் வைத்து வரம் வாங்கியிருந்தான்.

அதன்படி, பகலாகவும் இரவாகவும் இல்லாத அந்திப்பொழுதில் நிகழ்ந்தது நரசிம்ம அவதாரம். மனிதனாகவும் இருக்கவில்லை. சிங்க முகத்துடன் இருந்தார். மிருகமாகவும் இருக்கவில்லை. மனித உடலைக் கொண்டிருந்தார். ஆயுதமெல்லாம் எடுக்கவில்லை. தன் கை நகங்களையே ஆயுதமாக்கி, இரணியனின் குடலை உருவியெடுத்தார். வீட்டுக்குள்ளேயும் இல்லாமல், வெளியிலும் இல்லாமல், வாசலில் வைத்தே அவனைக் கொன்றொழித்தார் என்கிறது புராணம்.

ஆகவே, மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரம் நரசிம்மரை வணங்கி வழிபடுவதற்கு உரிய அற்புதமான நேரம் என்பார்கள். மேலும்  பிரதோஷ தினத்தில், பிரதோஷ வேளையில் அவர் அவதரித்தார் என்பதால், பிரதோஷத்தின் சிவாலயங்களில் நடப்பது போல், நரசிம்மருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இண்று 28.4.18 சனிக்கிழமை நரசிம்ம ஜயந்தி. எனவே இந்தநாளில், மாலையில் அருகில் உள்ள பெருமாள் ஆலயத்துக்குச் சென்று அவரை வழிபடுங்கள். முடிந்தால், பானக நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். எதிரிகள் தொல்லை ஒழியும். தீயசக்திகள் அழியும். மனதில் வீரத்தையும் தெளிவையும் தந்தருள்வார் நரசிம்மர்.

சென்னை  தாம்பரம் - செங்கல்பட்டு வழியில் உள்ள சிங்கபெருமாள் கோயிலில் உள்ள நரசிங்க பெருமாளுக்கு இன்று விசேஷ பூஜைகள் நடைபெறும். அதேபோல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் உள்ள நரசிம்மரின் சந்நிதியில் விசேஷ ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும்.

நரசிம்மரை வணங்குவோம். நலமுடனும் வளமுடனும் வாழ்வோம்!

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close