[X] Close

   சிவனுக்குப் பிடித்த மதுரை!


sivananukku-piditha-madurai

  • வி.ராம்ஜி
  • Posted: 28 Apr, 2018 12:51 pm
  • அ+ அ-

மதுரையில் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது சித்திரைத் திருவிழா. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றதை அடுத்து இன்று திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. கொளுத்தியெடுக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரோட்டத்தில் கலந்துகொண்டனர்.

அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் கம்பீரமாக இன்று மாலையில் கிளம்புகிறார்.

பெருமையும் சிறப்பும் மிக்க மதுரை சித்திரைத் திருவிழா நடைபெறும் வேளையில், மதுரையைப் பற்றி அறிவோமா?

   மதுரையம்பதி, மதுராபுரி, கூடல் மாநகரம் என்றெல்லாம் மதுரைக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. அதேபோல, ஆலவாய் நாதர் கோயில், ஆலவாய் சொக்கனார் கோயில், அங்கயற்கண்ணி கோயில் என ஸ்ரீமீனாட்சியம்மை ஆலயம் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. 

‘’நினைத்தால் முக்தி என்று திருவண்ணாமலையையும், பிறந்தால் முக்தி என்று திருவாரூரையும் சொல்கிறோம். அதேபோல், ‘மதுரை’ என்று சொன்னாலே போதும், முக்தி நிச்சயம்! வாழும்போதே, அதற்கான பலன் உண்டு. சிவனாரின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த பூமி இது. அவரின் விளையாடல்கள் மொத்தமும் அரங்கேறிய தேசம் இது. அவ்வளவு ஏன்... சிவனாரே தன் சிரசில் இந்த மண்ணை எடுத்து வைத்திருக்கிறார் அல்லவா! அதாவது, பிட்டுக்கு மண் சுமந்த லீலையை நிகழ்த்தியிருக்கிறார்.  அப்படியெனில் புண்ணிய பூமி என்று மதுரையைச் சொல்லாமல் இருக்கமுடியுமா?

  க்ஷேத்திரம் ஹாலாஸ்யம் சதுர்ஸம் தீர்த்தம் ஹேமாப்சி நீஷமம்

லிங்கம் சுந்தரேச துல்யம் நாஸ்தி ஜகத் ப்ரயே. ‘ஹாலாஸ்யம்’

என்று சம்ஸ்கிருதத்தில் பெருமையுடன் சொல்லப்படும் தேசம் மதுரை மாநகரம்! மதுரைக்கு நிகரான தலமும், பொற்றாமரைக்கு நிகரான தீர்த்தமும், ஸ்ரீசுந்தரேச பெருமானுக்கு நிகரான மூர்த்தமும் மூவுலகிலும் இல்லை என்று ‘ஆலாஸ்ய மாகாத்மியம்’ எனும் நூல் விவரிக்கிறது. மூர்த்தி, சுயம்பு. பொற்றாமரை தீர்த்தக் குளம், சிவனாரே உண்டாக்கிக் கொண்டது. தனக்காக, தான் பூமியில் வசிப்பதற்காக, அவரே விருப்பப்பட்டு நகரத்தை உருவாக்குகிறார். அதுவே மதுராபுரி என்கிற இந்த மதுரை மாநகரம் என்கிறது ஸ்தல புராணம்‘’ என்று பெருமையுடன் விவரிக்கிறார் ஸ்ரீமீனாட்சி கோயிலின் பரம்பரை ஸ்தானீகர்கள். 

சம்போஸ்து லீலாஸ்த நத்வாது க்ஷேத்திர மேதத் பராபரம்.

யதான சந்தி க்ஷேத்ரானி புண்யானி புவனே சுச

ஸ்ரீஹாலாஸ்யம் சிவேனநவ

விகர்த்தும் நிர்மிதம் புரா.

தஸ்மாது க்ஷேத்திர மாகாத்மியம்

ஜானா தேவ மகேஸ்வர:

அதாவது, சிவபெருமான் தன் லீலைகளை, விளையாடல்களை இங்கே அருளிச் செய்ததாலும், உலகில் க்ஷேத்திரங்கள் உண்டாவதற்கு முன்பே, தான் வசிப்பதற்காக சிவனார் இந்தத் தலத்தை உண்டு பண்ணியதாலும், இந்தத் தலத்தின் பெருமை கள் அனைத்தையும் முழுவதுமாக அறிந்த ஒரேயொருவர்... சாட்ஷாத் சிவபெருமான் மட்டுமே! என்று வியந்து சொல்கிறார் அகத்திய மாமுனி! மகேசனின் சடையில் உள்ள சந்திரனில் இருந்து அமிர்த தாரை  இங்கு வழிந்ததால், மதுராபுரி என்று அழைக்கப்படுகிறது என்கிறார்கள். 

ஆக, சிவபெருமானுக்கு ரொம்பவே பிடித்த மதுரையில், சீரும் சிறப்புமாக நடைபெறும் சித்திரைப் பெருவிழாவில் கலந்து கொள்வோம். ஈசனின் அருளைப் பெறுவோம்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close