[X] Close

கே.எல்.ராவ்: கங்கை-காவிரி கனவுத் திட்ட நாயகர்


  • kamadenu
  • Posted: 27 Mar, 2019 08:27 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 21: இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

இதுவரை சூரியன் முதல் சனி பகவான் வரை நீசம் மற்றும் நீசபங்க ராஜ யோகம் எப்படியான பலன்களைத் தரும், அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதையெல்லாம் பார்த்தோம்.  

இன்னும் இரண்டு கிரகங்கள் மட்டும் பார்க்க வேண்டியிருக்கிறது. அவர்கள்... ராகு மற்றும் கேது. 

இவர்கள் நீசம் அடைவார்களா? அதாவது ராகுவுக்கும் கேதுவுக்கும் நீசபங்கம் உண்டா? அப்படி நீசபங்கம் அடைந்தால் ராஜ யோகத்தைத் தருவார்களா? என்று கேட்டால் அதற்கான பதில்... ‘இல்லை’ என்பதுதான்!

அவ்வளவு ஏன்? முதலில் இவர்கள் நீசம் என்ற அந்தஸ்தைப் பெறுவதே இல்லை.  நீசம் என்ற நிலை இருந்தால்தானே நீசபங்கம் என்ற நிலையே உண்டாகும்.  

ஆமாம். இவர்கள் முழுமையான ஆதிக்க சக்தியை உடையவர்கள். இவர்கள் எந்த வீட்டில் (ராசியில்) இருக்கிறார்களோ அந்த வீட்டை முழுமையாக ஆட்கொண்டு விடுவார்கள். 

அதுமட்டுமல்ல கூட இருக்கும் கிரகங்கள் யாராக இருந்தாலும்  சூரியன் உட்பட எவரும் தாங்கள் வழங்க வேண்டிய பலன்களை கூட அவர்களை நேரடியாகத் தராமல் தன் மூலமாகவே தருவார்கள் இவர்கள்.

சற்று குழப்பமாக இருக்கிறதா?

இன்னும் விளக்கமாகவே சொல்லுகிறேன்.

ஒரு ராசியில் ராகு இருக்கிறார். அவருடன் சூரியன் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

இப்போது சூரியன் தர வேண்டிய பலன்கள் எதுவானாலும் அவற்றை நேரடியாக சூரியனால் வழங்க முடியாது. அவருடைய பலன்களை அதாவது சூரியனின் பலன்களுடன் சேர்த்து தன் பலன்களையும் இணைத்துத் தருவார் ராகு பகவான்.

இது ஜாதகரை பாதிக்குமா? எனில், எப்படி பாதிக்கும்?

சூரியன் நேர்மை, ஒழுக்கம், உண்மை முதலான குணங்களை உடையவர். ராகு இதற்கு எதிரான குணங்களை உடையவர்.

இப்போது ஜாதகரின் நடத்தை எப்படி இருக்கும்?

தோற்றத்தில், நடை உடை பாவனைகளில் சூரியன் போல இருப்பார். மூச்சுக்கு முன்னூறு தடவை, ’நாம நேர்மையா, ஹானஸ்ட்டா, உண்மையா இருந்தா நாம யாருக்கு பயப்படணும்?’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ’பொய்யாப் பேசிப் பழகி, நூறு வருஷம் வாழ்றதை விட, உண்மையைப் பேசி நிம்மதியா ஒருநாள்... ஒரேயொரு நாள் வாழ்ந்தாலே போதும்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.

ஆனால், உண்மை என்ன தெரியுமா? அத்தனை முறைகேடான செயல்களையும் அவர்தான் செய்துகொண்டே இருப்பார். சட்ட விரோத செயல்கள், அரசு விரோத காரியங்கள் என ஒரு தீய செயல்கள் பாக்கி இருக்காது. அத்தனைக்கும் சொந்தக்காரராக இருப்பார். இனிமையாகப் பேசியே அனைவரையும் வசீகரித்து விடுவார். தவறுகளை அசால்ட்டாக செய்துகொண்டே இருப்பார், 

ராகுதான் இப்படி. கேதுவாவது... என்று கேள்வி வரலாம். ராகு என்ன கேது என்ன... இருவரும் இந்த விஷயத்தில், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். ஆனால் என்ன... கொஞ்சூண்டு வித்தியாசம் உண்டு.

எல்லா அதிகாரங்களும் உடையவர் சூரியன். ஆனால் கேதுவோடு சேரும்போது எந்த அதிகாரமும் இல்லாதவர்போல் எளிமையாக இருப்பார். அதிகார பலத்தை உணராதவராக, அப்படியே உணர்ந்தாலும் அதை வெளிப்படுத்தாதவராக இருப்பார். அந்த அதிகாரத்தால் எந்த நன்மையையும்  தானும் பெற்றுக்கொள்ள மாட்டார். அடுத்தவர்களுக்கும் தரமாட்டார். ’இவரை நம்பி ஒரு பிரயோசனமும் இல்லப்பா’ என்று சொல்லுவோமே. கிட்டத்தட்ட அப்படித்தான் இருப்பார் சூரிய பகவான்.

ஆக, ராகு வில்லன். கேது வில்லாதிவில்லன். இப்படி ராகு கேதுக்கள் ஆக்கிரமிப்பாளர்களாக இருப்பதால் அவர்களுக்கு உச்சம் நீசம் என்ற நிலை தேவைப்படுவதே இல்லை.

அப்படியானால் விருச்சிகத்தில் உச்சம் என்றும், ரிஷபத்தில் நீசம் என்றும் சொல்லப்படுகிறதே!

ஆமாம். விருச்சிகம் என்பது தேள் வடிவ ராசி. அதாவது விஷ ராசி. மேலும் விருச்சிகத்தின் தன்மையானது அது நீர் ராசி. அது எந்த மாதிரியான நீர்  தெரியுமா? கழிவு நீர் உள்ள இடம். ஆபத்தான கெமிக்கல்கள், ரசாயனம் கலந்திருக்கும் இடம் என்பவற்றையெல்லாம் குறிக்கும்!

இவை அனைத்தும் ராகு கேதுவுக்கு பொருந்துவதால் விருச்சிகம் அதன் உச்ச வீடாக உருவகப்படுத்தப்பட்டது.  

ரிஷபம் ஏன் நீச வீடு என ராகு கேதுவுக்கு அர்த்தப்படுத்தப்பட்டது? உச்ச வீட்டிற்கு நேர் ஏழாமிடம் நீசம் என்பதால் வழங்கப்பட்டது  (விருச்சிகத்திற்கு நேர் ஏழாம் வீடு ரிஷபம்). 

ரிஷபத்தின் அடையாளம் காளைமாடு. இது பொறுமையின் அம்சம். மாடு எல்லா வேலைகளுக்கும் பயன்படும்.  நிலம் உழலாம். வண்டி ஓட்டலாம்.  செக்கு இழுக்கச் செய்யலாம். ஜல்லிக்கட்டு விளையாட்டுகளுக்கும் பயன்படும். இப்படி எதற்கும் பயன்படக்கூடியது காளை! உண்மையில் தன் பலத்தை காளை உணருவதே இல்லை என்பதுதான் உண்மை!

ஆகவேதான் ரிஷபத்தை நீசமாக உருவகப்படுத்தினார்கள். 

ஆனால் உண்மையில் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது போல், ராகு கேதுவுக்கு உச்சம் நீசம் என்ற நிலையெல்லாம் கிடையாது என்பதுதான் நிதர்சனம்.

எனவே ராகு கேதுவுக்கு நீச பங்கமும் இல்லை. இவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்பதால் அதன் கடுமையை குறைத்துக்கொள்ள சில பரிகாரங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

ஆந்திராவின் காளஹஸ்தி பிரசித்தி பெற்ற, சாந்நித்யம் கொண்ட ராகு கேது ஸ்தலம். இங்கு சென்று வழிபடுவது ராகுகேதுவின் தாக்கத்தைக் குறைக்கும். சர்ப்ப பாதிப்புகளையும் சர்ப்ப தோஷங்களையும் போக்கும்.

கும்பகோணம், மயிலாடுதுறை அருகில், திருமீயச்சூர், பேரளத்துக்கு அருகில் உள்ள திருப்பாம்புரம் ராகு ஸ்தலம், சீர்காழிக்கு அருகில் உள்ள கீழ்பெரும்பள்ளம் நாகநாதர் ஆலயம் கேது ஸ்தலம். இந்த ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டாலே இந்த பாம்புகளின் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள முடியும். அவற்றில் இருந்து விடுபட்டு, வளர்ச்சியைக் காணமுடியும்.

இவற்றையெல்லாம் விட முக்கியமாக, உங்கள் வீட்டுக்கு அருகில் புற்றுக்கோயில்கள் இருக்கிறதா? தயவுசெய்து, முடிந்தபோதெல்லாம் அங்கு சென்று வழிபடுங்கள். புற்றுக்கு பால், முட்டை என வழங்குங்கள்.  நல்ல மாற்றங்களை வெகு சீக்கிரமாகவே உணருவீர்கள்.  

அடுத்ததாக, ராகுவின் அதிதேவதை துர்கை மற்றும் காளி. எனவே

துர்கை கோலோச்சும் ஆலயங்களும் காளிதேவி குடிகொண்டிருக்கும் கோயில்களும் மறக்காமல் தரிசித்து வழிபடவேண்டிய ஸ்தலங்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். கும்பகோணம் அருகில் உள்ள

 பட்டீஸ்வரம் பிரசித்தி பெற்ற சிவாலயம். ஆனாலும் இங்கே உள்ள துர்கையே பிரதான தெய்வம். பட்டீஸ்வரம் துர்கையை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் வழிபட்டு வாருங்கள்.

அதேபோல் பெருமாள் கோயில்களில் விஷ்ணு துர்கையின் சிலை இருக்கும். கோஷ்டத்தில் விஷ்ணு துர்கையை தரிசிக்கலாம். விஷ்ணு துர்கையை தரிசித்துப் பிரார்த்தனை செய்வதும் மிகுந்த பலத்தையும் கூடுதல் பலனையும் வழங்கும்.

தில்லை என்று போற்றப்படும் சிதம்பரத்தில் உள்ள தில்லைக்காளியம்மன் கோயில்,

திருச்சி உறையூரில் குடிகொண்டிருக்கும் வெக்காளியம்மன் கோயில், திண்டிவனம் அர்ருகில் உள்ள திருவக்கரை வக்ரகாளி, சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் முதலான காளி குடிகொண்டிருக்கும் கோயிலுக்கு, அவள் தன் சக்தியை வியாபித்திருக்கும் ஆலயங்களுக்குச் சென்று தரிசிப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள். ராகுவின் ஆதிக்கம் குறையும். அப்படியே ராகு நம்மை நோக்கி எகிறினாலும் ஒரு தாயைப் போல் அவள் நம்மைப் பார்த்துக்கொள்வாள்.

கேதுவின் அதிதேவதை சித்ரகுப்தன். தமிழகத்தில் வேறெங்கும் காண்பதற்கு அரிதான ஆலயம் இவருக்கு இருக்கிறது தெரியும்தானே.

நகரேஷு காஞ்சி என்று போற்றப்படும் காஞ்சிபுரத்தில், சித்ரகுப்தனுக்கு தனிக்கோயிலே அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலுக்கு வந்து, சித்ரகுப்தனை வணங்குங்கள். கேதுவின் பாதிப்புகள் குறையும்.

மேலும் விநாயகரையும் அனுமனையும் அடிக்கடி வணங்குங்கள். பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை, வெள்ளெருக்கு மாலை சார்த்துங்கள். அனுமனுக்கு துளசி மாலையும் வெற்றிலை மாலையும் சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். கேதுவின் ஆதிக்கம் குறையும். இந்த தெய்வங்கள், உங்களுக்கு கண்கண்ட தெய்வமாக இருந்து, உங்களை காபந்து செய்வார்கள் என்பது சத்தியம்.

அடுத்து... விபரீத ராஜயோகம் என்றால் என்ன? அது செய்யும் நல்ல நல்ல மாற்றங்களும் பலன்களும் என்னென்ன...

பார்ப்போம்.

-தெளிவோம்

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close