நெல்லையப்பர் கோயில் தேர்களில் அலங்கார துணிகள், பொம்மைகள் அமைப்பு: ஜூன் 21-ல் தேரோட்டம்


திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்தரும் காந்திமதி அம்பாள் சமேத அருள்மிகு நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்களில் பொம்மைகள், அலங்கார துணிகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திருக்கோயிலில் இவ்வாண்டுக்கான ஆனிப்பெருந்திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. விழாவின் 5-ம் நாளான நேற்று காலையில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்திலும், மாலையில் இந்திர விமானத்திலும் நான்கு ரத வீதிகளிலும் உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலில் நின்றசீர் நெடுமாறன் கலையரங்கத்தில் இரவில் பரத நாட்டியம் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்ற கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் உள்ளிட்ட 5 தேர்களை தயார்படுத்தும் பணிகள் கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்களை கழுவி சுத்தப்படுத்தும் பணிகளுக்குப் பின் வார்னீஸ் பூசப்பட்டது. தேர் சக்கரங்களில் வண்ணங்கள் பூசப்பட்டது.

அத்துடன் அலங்கார தட்டுகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் தேர்களின் முன் பகுதிகளில் குதிரை பொம்மைகள் பொருத்தும் பணிகளும், அலங்கார துணிகள் கட்டும் பணிகளும் நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி 21-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.