கடையநல்லூரில் பக்ரீத் சிறப்புத் தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு


தென்காசி: பக்ரீத் பண்டிகை இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றது.

கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் 9 இடங்களில் நடைபெற்ற தொழுகையில் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். காயிதே மில்லத் திடலில் அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி தலைமை வகித்து தொழுகையை நடத்தினார். பேட்டை மர்க்கஸுந் நூர் தவ்ஹீத் திடல், மதினா நகர் திடல் உட்பட மாவட்டத்தின் 9 இடங்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதையொட்டி ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தொழுகைக்கு பின்னர் ஏராளமான ஆடு, மாடுகளை பலியிட்டு அதன் இறைச்சியை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினர். புளியங்குடியில் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை நியூ கிரஸன்ட் பள்ளி அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. பள்ளிவாசல் இமாம் அப்துல் மஜீத் பைஜி தொழுகையை நடத்தினார். அஹ்மது ஹசன் ஸாலிஹி பெருநாள் குத்பா உரையாற்றினார்.

பள்ளிவாசல் தலைவர் அப்துர் ரஹ்மான், செயலாளர் ஹைதர் அலி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர், வடகரை, வீரணம், சங்கரன் கோவில், வாசுதேவநல்லூர், திரிகூடபுரம் பல்வேறு பகுதிகளிர் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.