பல்லாவரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை


பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை

பல்லாவரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இதையொட்டி பள்ளிவாசல்கள், திறந்த வெளி இடங்கள் உள்ளிட்ட சுமார் 200 இடங்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் செங்கல்பட்டு (மேற்கு) மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக ஈகை திருநாள் (ஈதுல் அல்ஹா) தொழுகை பல்லாவரம் ஆட்டுத் தொட்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் அல் அமீன் கலந்து கொண்டு பெருநாள் உரையாற்றினார். கிளை தலைவர் முஹமது அசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் சிறப்பு தொழுகையாக சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

இந்த தொழுகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனர். இந்தச் சிறப்பு தொழுகையில் ஊர் நன்மை, உலக நன்மை, மழை பெய்ய வேண்டியும் இறைவனிடம் துவா கேட்கப்பட்டது. தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பண்டிகை வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

இதேபோல குர்பானி கொடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் சிலர் வீடுகளில் பிரியாணி சமைத்து நண்பர்களுக்கு வழங்கினர்.
இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். இஸ்லாமிய மக்கள் தொழுகையை முடித்து வீடு திரும்பியதும் இறைவனுக்கு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை குர்பானி எனப்படும் புனித பலி கொடுத்தனர். பின்பு அதில் குறிப்பிட்ட பங்கை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.