[X] Close

பணத்தின் அருமை உங்களுக்கு தெரியலையா? உணர்த்துவார் சனி பகவான்!


jodhidam-arivom-2-17

பணம்

  • kamadenu
  • Posted: 26 Feb, 2019 10:03 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 17: இதுதான்... இப்படித்தான்!

- ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே..

இப்போது, சனி பகவான் நீசமானால் என்ன பலன்? நீசபங்கம் அடைந்தால் என்ன பலன்? என்று பார்க்கலாம்.

"திண்ணைல படுத்திட்டிருந்தவனுக்கு  "திடுக்"னு வந்துச்சாம் வாழ்வு" என்பது கிராமத்துப் பழமொழி.

இதற்கு பெரிதாக விளக்கம் தரத் தேவையில்லை. சும்மா இருந்தவனுக்கு திடீர் என்று ராஜ வாழ்வு வந்தது என்பது தான் இதன் விளக்கம்.

சரி, இது எப்படி சாத்தியம்?

இப்படி ஒரு அமோக வாழ்க்கையை, இரண்டு கிரகங்கள் மட்டுமே தர முடியும்,ஒருவர் ராகு, மற்றொருவர் சனி .

ராகு, ராஜ வாழ்க்கையைத் தந்தாலும் கடைசியில் "ஒன்றும் இல்லாமல்" கூட செய்து விடும்.

சனி, தருகின்ற யோகமான வாழ்க்கையை எவராலும் கெடுக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது.

அதனால்தான்   "குரு கொடுப்பதை சனி தடுப்பார். சனி கொடுப்பதை எவர் தடுப்பார்" என்ற ஜோதிடப் பழமொழியே உண்டானது,

ஒரு மனிதன் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால், ஜாதகத்தில் நல்லநிலையில், சனி பகவான் இருக்க வேண்டும். அவர் செவ்வாய் அல்லது கேதுவோடு இணையக் கூடாது. இணைந்தால்...? வாழ்க்கையே போர்க்களமாகிவிடும்.

சனிபகவானைப் பற்றி தவறான கருத்து அல்லது பார்வை இங்கே நிறையபேருக்கு உண்டு. அது, சனி கெடுப்பவர், ஏழரை சனி வந்தால் அவ்வளவுதான். எல்லாம் இழந்து தெருவில் விட்டுவிடுவார். சனி திசையா... ஒரே போராட்டம்தான்... என்றெல்லாம் பலரும் பேசக் கேட்டிருப்பீர்கள்!

இவை எல்லாம் உண்மையா? 

இதெல்லாம் கட்டுக்கதை. நம்பவே வேண்டாம். சனிபகவான் என்பவர் நீதிபதி. அவர் யாருக்கும் வளைந்து கொடுக்காதவர். எவருடைய சிபாரிசையும் ஏற்கமாட்டார். தான் எதைத் தரவேண்டுமோ அதை எந்தத் தடையும் இல்லாமல் முழுமையாகத் தருபவர்.

சரியாகச் சொல்ல வேண்டுமானால், நம் முன்ஜென்ம வினைகளின் அடிப்படையில், இந்த ஜென்மத்தில் நாம் எதை அனுபவிக்க வேண்டுமோ அதை முழுமையாகத் தந்து அனுபவிக்க வைப்பார் சனி பகவான்.

புண்ணியம் அதிகம் இருந்தால் நற்பலன்களும், பாவம் அதிகம் இருந்தால் “இனி பாவங்கள் செய்யாதபடி திருந்தி வாழவும்” ஒரு ஆசானைப் போல் இருந்து படிப்பினைகளைத் தருவார். இந்த படிப்பினைகள் நமக்குத் தண்டனையாகத் தெரிகிறது, அவ்வளவுதான்!

அதேபோல் இந்தப் பிறப்பில் என்ன தவறுகளைச் செய்கிறோமோ அதை உரிய நேரம் பார்த்து, நம்மைத் திருத்தவும் செய்வார். உதாரணமாக, தேவைக்குமேல் அல்லது தேவையில்லாமல் செலவு செய்பவரா நீங்கள்? சனி,படிப்பினையைத் தரும் நேரம் வரும்போது., பணத்தின் அருமையை உணர்த்தும் விதமாக எங்கும், எவரும் உதவாத படி பணத்தின் அருமையை உணர்த்தி, அந்தக் கஷ்டங்களை அனுபவிக்க விட்டுவிட்டு, பிறகு அந்தப் பிரச்சினையை தீர்த்துவைப்பார்.

அதனால் சனிபகவானைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை இனி மாற்றிக்கொள்ளுங்கள்.

வாழ வழி தெரியாமல், அல்லது வாழ்வை எதிர்கொள்ள எதிர்நீச்சல் போடுபவர்களை சனிபகவான் என்றுமே கை விட்டதில்லை என்பது ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கும் நீதி!

இப்படி போராட்டத்தோடு வாழ்பவர்களை,சனி பகவான் கண நேரத்தில் குபேர யோகத்தை அருளிச்செய்து, மிகப்பெரிய வசதி வாய்ப்புகளை அள்ளித்தருவார்.

அதனால்தான் 30 வருடம் வாழந்தவனும் இல்லை, 30 வருடம் வீழ்ந்தவனும் இல்லை என்றார்கள். அதாவது, சனியின் சஞ்சாரத்தை அடிப்படையாக வைத்து சொல்லப்பட்டதுதான் ( சனியின் சஞ்சாரம் என்பது ராசி மண்டலத்தை ஒருமுறை சுற்றி வரும் கால அளவு ஆகும். அது, 30 ஆண்டுகளாகும்). 

இன்னும் சனி பகவான் குறித்துப் பார்க்கலாம். அதற்கு முன்னதாக சனி நீசமானால் என்ன பலன் என்று பார்ப்போம்.

சனி நீசமானால்:- தினச் சம்பளம், வாரச் சம்பளம், மாத ஊதியம் முதலான வேலைகளில் ஈடுபட வைக்கும்.

உடல் உழைப்பை அதிகமாகக் கொண்டுள்ள வேலைகளே அமையும். உதாரணமாக, மூட்டை தூக்குதல், ரிக்‌ஷா ஓட்டுதல், சாலை போடும்பணிகள், கார், பஸ், ஆட்டோ ஓட்டும் தொழில்,துப்புரவுப் (நிறுவன) பணிகள், அலுவலக உதவியாளர் என்ற பணிகளைச் செய்ய நேரிடும்.

உயர்கல்வி படித்திருந்தாலும், படிப்பிற்கேற்ற வேலை அமையாமல், கிடைத்த வேலையும் பணிச்சுமை உள்ளதாக இருந்து, மன அழுத்தம் தரக்கூடியதாக இருக்கும்.

என்னங்க வேலையை பற்றி மட்டுமே சொல்கிறீர்களே..! என்று கேட்பது புரிகிறது. என்ன செய்வது சனிபகவான் உத்தியோகம், தொழில் இவற்றுக்கு காரகனாக இருப்பதால் அதைப்பற்றிய விபரங்களே பிரதானம். அதுமட்டுமின்றி, வேலை சரியாக இருந்தால்தான், அலுலகத்திலும் வீட்டிலும் நிம்மதியாக இருக்கமுடியும்.

சொந்தத் தொழில் செய்பவராக இருந்தால், தொழில் நிதானமான வளர்ச்சியைத்தான் கொடுக்கும். அல்லது ஒரேமாதிரியாக இருக்கும். அதுமட்டுமா? ஊழியர்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் ஊழியர்களின் கட்டுப்பாட்டில் நீங்கள் இருக்கும்படியான சூழல் உண்டாகும்.

சரி மற்ற விஷயங்கள் என்ன என்று பார்க்கலாம். இளம் வயதிலேயே நரைமுடி உண்டாகும். நரம்புத்தளர்ச்சி, எலும்பு வளர்ச்சி இல்லாமல் போவது, கால் மற்றும் பாதங்களில் பாதிப்பு, அஜீரணக்கோளாறு, வளைந்த முதுகு( கூன் போன்ற அமைப்பு) தாடை பகுதியில் வெட்டுக் காயம் அல்லது இரட்டைத்தாடையாகத் தெரிவது,

ஆசனவாயில் புண், மூல நோய்கள், வாயுக்கோளாறு ஆகியவை அனைத்தும் சனி நீசமானால் உண்டாகும்.

கசங்கிய உடை அணிதல், அல்லது உடை நேர்த்தி இல்லாமல் ஏனோதானோ என்று உடை அணிதல், பழைய உணவுகளை சூடுபடுத்தி உண்ணுதல், நண்பர்கள் கூட்டத்தில் நண்பர்களுக்காக அடிமை போல் வேலை செய்தல் எனும் நிலை இருக்கும். ஒவ்வொரு நண்பர்கள் கூட்டத்திலும் ஒரு நபர் ஏய்க்கப்படுபவராக இருப்பார். அவரோ “தன்னை இப்படி படுத்துகிறார்களே” என்ற உணரக்கூட மாட்டார்.

இப்படியானவர்களின்  ஜாதகங்களை எடுத்துப்பார்த்தால், சனிபகவான் நீசம் அடைந்திருக்கிறார் என்பது உறுதி.

இன்னும் நிறைய இருக்கிறது..... அடுத்த பதிவிலும் சனி பகவானைப் பார்க்கலாம்!

- தெளிவோம்

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close