கும்பகோணம் தேனுபுரீஸ்வரர் கோயில் முத்துப் பந்தல் விழா தொடக்கம்


கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், பட்டீஸ்வரத்திலுள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலில் மூன்று நாட்கள் நடைபெறும் முத்துப் பந்தல் விழா இன்று தொடங்கியது.

ஆண்டு தோறும் தேனுபுரீஸ்வரர் கோயிலில் முத்துப் பந்தல் விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இன்று இந்த விழா தொடங்கியது. இன்று காலை கோயிலிலுள்ள ஞானவாவி குளத்தில், திருஞானசம்பந்தருக்கு சுவாமி-அம்பாள் காட்சி அளித்து திருமுலைப்பால் வழங்கும் வைபவம் நடைபெற்றது. இதையடுத்து திருஞானசம்பந்தருக்கு, இறைவன் வழங்கிய, முத்துக் கொண்டை, முத்துக் குடை, முத்துச் சின்னங்களுடன் வீதியுலா நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று இரவு மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட முத்து திருவோடத்தில் திருஞானசம்பந்தர் வீதியுலா நடைபெறுகிறது. பிரதான நிகழ்ச்சியான ஜூன் 15ம் தேதி காலை 7 மணிக்கு திருஞானசம்பந்தர் முத்துப் பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அதனைத் தொடர்ந்து திருமேற்றளிகை கைலாச நாதர் கோயிலுக்கும், மதியம் திருசக்தி முற்றம் சக்திவனேஸ்வரர் கோயிலுக்கும், பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கும் விதியுலவாக சென்று சுவாமி தரிசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.

அன்று இரவு 8 மணிக்கு ஞானாம்பிகையம்மன் சமேத தேனுபுரீஸ்வரர் முத்து விமானத்தில் காட்சியளிப்பதும், இவர்களை திருஞானசம்பந்தர் எதிர்வணங்கி, முத்துப்பந்தல் நிழலில் வீதியுலா வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.