நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


நெல்லையப்பர் கோயில்

திருநெல்வேலி: திருநெல்வேலியிலுள்ள பிரசித்தி பெற்ற அருள்தரும் காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா வியாழக்கிழமை (ஜூன் 13) கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. இத்திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் முக்கியமானதாக ஆனித் தேரோட்ட பெருந்திருவிழா உள்ளது. இந்த ஆண்டுக்கான திருவிழா வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்குமேல் 5.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக அதிகாலை 4 மணிக்கு பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி, அம்பாள் உட்பிரகாரம் உலா நடைபெற்றது. இதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதியுலா நடைபெறுகிறது. இந்த விழா வரும் 22-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை 8 மணிக்கும் இரவு 7 மணிக்கும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் திருவீதியுலா நடைபெறுகிறது.

நின்றசீர் நெடுமாறன் கலையரங்கத்தில் தினமும் மாலையிலும், இரவிலும் தேவார இசை, பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், சரித்திர நாடகம், கிராமிய இசை, பக்தி இன்னிசை, திருமுறை பாராயணம், பஞ்சவாத்ய இசை, சிறப்பு ராஜமேளங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. விழாவின் 7-ம் நாளான வரும் 19-ம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி நடராஜ பெருமான் சிவப்பு சாத்தி திருவீதியுலாவும், இரவு 10மணிக்கு வெள்ளை சாத்தி உட்பிரகாரம் உலா வருதலும் நடைபெறுகிறது.

விழாவின் 8-ம் நாளான வரும் 20-ம் தேதி காலை 8 மணிக்கு சுவாமி நடராஜ பெருமான் பச்சை சாத்தி எழுந்திருந்து திருவீதியுலாவும், மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதியுலாவும், இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் வீதியுலா, சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்மன் தங்கக் கிளி வாகனத்திலும் திருவீதியுலா நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 3 மணிக்கு மேல் 4 மணிக்குள் சுவாமி அம்மன் தேரில் எழுந்தருள்கின்றனர். காலை 6.30 மணிக்குமேல் 7.46 மணிக்குள் தேர் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறவுள்ளது. தேர் நிலையம் வந்தவுடன் சப்தாவர்ண பல்லக்கில் சுவாமி அம்மன் திருவீதியுலா நடைபெறுகிறது. தேர் நிலையம் வந்த மறுநாள் விழாவின் 10-ம் நாளான வரும் 22-ம் தேதி தீர்த்தவாரி நடைபெறும்.