[X] Close

சுக்கிர யோகம்; மகாலக்ஷ்மி அருள்; என்ன செய்யணும்?


jodhidam-airvom-2-15

  • kamadenu
  • Posted: 19 Feb, 2019 10:19 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் (2) - 15: இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

சுக்ரன் என்னும் சுக்ராச்சாரியர் குறித்து இப்போது பார்க்கலாமா?

தேவர்கள் அமிர்தம் எடுக்க பாற்கடலைக் கடையக் காரணமே இந்த சுக்ர பகவான்தான் என்பது தெரியும்தானே!

ஆமாம்.

குருபகவான் எனப்படும் பிரகஸ்பதி, தேவர்களுக்கு குரு. அதனால்தான் தேவகுரு என்று அழைக்கப்பட்டார். அப்படியெனில் அசுரர்களின் குரு சுக்ராச்சாரியர். அவர் அசுரகுரு, தேவ குருவிடம் இல்லாத ஒரு வித்தை சுக்கிராச்சார்யருக்குத் தெரியும். அதுதான் இறந்தவர்களை உயிர்பிக்கும் சஞ்ஜீவி தந்திரம்.

வேறு வழியில்லாமல் அமுதம் எடுக்க வேண்டிய நிர்பந்தம் தேவர்களுக்கு ஏற்பட்டது. அதானாலேயே பாற்கடல் கடையப்பட் டது.

பாற்கடலைக் கடைந்ததால் ஏற்பட்ட நன்மைகள் கணக்கிலடங்காதவை. அமுதத்தை வரவைக்க கடைந்த போது, முதலில் வந்தது ஆலகால விஷம். அதை ஈசன் பருகினார். அதன் கடுமையைப் போக்க சிவதாண்டவத்தை அம்மை உமையவளுடன் நிகழ்த்தினார். அந்த நேரம்தான், சாயங்காலவேளை. அந்தத் தருணம்தான் பிரதோஷம் எனும் உன்னதமான நாள்.

அதன் பிறகு கேட்டதைத் தரும் கற்பக விருட்சம், காமதேனு என  அனைத்து தெய்வங்களையும் தன்னுள் வைத்திருக்கும் பசுவும் வந்தது.

மகா விஷ்ணுவின் கூர்ம அவதாரம், அந்தப் பரந்தாமனுக்கு துணையாக ஸ்ரீ மகாலட்சுமி ....இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம், இறுதியாக அமுதம் கிடைத்தது,

இது அனைத்துக்கும் மூல காரணம் சுக்ராச்சாரியர் என்னும் சுக்ர பகவான்.

அதனால் மகாலட்சுமிக்கு சுக்ரன் மேல் அலாதி அன்பு உண்டு. அதனால்தான் செல்வத்துக்கு மகாலட்சுமியும், அந்தச் செல்வத்தை அடைய சுக்ரனின் அருளும் நமக்கு தேவை என்கின்றன புராணங்கள்.

அதுமட்டுமல்ல... ஸ்ரீதேவியும் ஸ்ரீரங்கபெருமாளுடன் கலந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாளும் அவதரித்தது பூரம் நட்சத்திரத்தில்தான்! பூரம் என்பது சுக்கிரனின் திருநட்சத்திரம்.

அவ்வளவு ஏன்... மகாலட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமையை, சுக்கிரவாரம் என்றுதானே சொல்லுகிறோம்?!

சரி, நாம் இப்போது சுக்ரனின் நீசம் மற்றும் நீசபங்கம் பற்றி பார்ப்போம்.

முதலில் ஒரு மிக முக்கியமான தகவல்...

சுக்ரனுக்கு  "நீசம்" என்ற அந்தஸ்து இல்லை என்பது ஆச்சரியமான ஒன்று!

அப்படியானால் உச்சம் என்ற நிலை இருக்கும்போது, நீசம் என்ற நிலையும் இருந்துதானே ஆக வேண்டும்.

நீசம் என்ற நிலை உண்டு. ஆனால் நீசம் என்ற அந்தஸ்து இல்லை.

சுக்ரன் நீசமடைந்த பெரும்பாலான ஜாதகர்கள் பெரும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். செல்வந்தர்களாகத்தான் இருப்பார்கள்.

அப்படியானால் நீசம் என்னதான் செய்யும்?

அளவுக்கு மீறிய பணம் அல்லது தகுதிக்கு மிஞ்சிய பணம் வந்தால் ஒரு மனிதன் எப்படி நடந்து கொள்வான். வேண்டாத பழக்கங்களும், மாறான வழக்கங்களும் ஒருசிலருக்கு வந்து சேரும்தானே!  

தான் எந்த நிலையிலிருந்து வந்தோம் என்பதை மறந்து, பரம்பரைச் செல்வந்தர் போல் போலியாக நடிக்க வைக்கும் என்பது கண்கூடான உண்மைதானே!

தகாத பழக்கத்தால் சமூகத்தில் பெயரைக் கெடுக்க வைக்கும். அதாவது தகாத உறவுக்கு செல்லவைத்து கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொடுக்கும்!

போதைப் பழக்கம் ஏற்பட்டு மீள முடியாத நிலையை உண்டாக்கும்.

வாழ்க்கைத் துணை அலட்சியமாக நடந்து கொள்வார். அதாவது பெரிய மரியாதையெல்லாம் தரமாட்டார். மரியாதை கொடுப்பவர்களிடமும் அலட்சியமாகவும் கேவலமாகவும் பேசிப் பிரச்சாரம் செய்வார்.

இந்த விஷயங்களையெல்லாம், நம்மை நெருங்கவிடாமல், நமக்குள் புகுந்துவிடாமல் கவனமாக இருந்தால், சாதாரண மனிதராக இருப்பவர்கள், சாதனை மனிதர்களாக நற்பெயர் எடுப்பார்கள். பேரும்புகழும் சம்பாதிப்பார்கள். கவுரவத்துடனும் மரியாதையுடனும் திகழ்வார்கள்.

அதேசமயம் புத்திர பாக்கியம் தாமதமாகும்  நிலை உண்டாகும். அல்லது குழந்தையே இல்லாத நிலை கூட ஏற்படலாம்.

சகலத்துக்கும் காரணம், சுக்ர பகவான். விந்து என்னும் சுக்கிலத்துக்கும்,கர்ப்பப்பை இருக்கும் நீர்க் குடத்திற்கும் காரகன், அதாவது எஜமானன் சுக்கிரன்தான். நீசமாக இருப்பின் விந்து நீர்த்துப் போய் விடும். பலம் இருக்காது. பெண்களுக்கு கர்ப்பப்பை இருக்கும் நீர்க் குடம் வறண்டு போய், விந்து உயிரணுக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்படும்.

சுக்கிரன் நீசம் பங்கமானால்:- வசதி வாய்ப்புகளுக்கு குறைவிருக்காது. ஆடம்பர வாழ்வு அமையும்.

சொகுசு வீடு, சொகுசுக் கார் என சுகபோக வாழ்க்கை உண்டாகும். பணப்பற்றாக்குறை என்ற நிலை வராது. எந்த வழியிலாவது யார் மூலமாவது பணம் வந்து சேரும்.

பல தொழில்கள், அல்லது பல நிறுவனங்களில் பங்குதாரராக இருப்பார்கள். வட்டித் தொழில்,ஆடை ஆபரணத் தொழில், பங்கு வர்த்தகம், பல்பொருள் அங்காடி, உயர் தர ஹோட்டல் தொழில் என எப்போதும் பணம்காசு புரள்கிற வாழ்க்கையை வாழ்வார்கள்.

வங்கிப் பணி, கருவூலத்தில் (treasury) பணி, மருத்துவர் (பெண்கள் நலம்) பொற்கொல்லர், கேஷியர், ஊர் ஊராகச் சென்று வியாபாரம் செய்தல் என நல்ல உத்யோகத்திலும் சிறப்பான, தரமான தொழிலிலும் இருக்கச் செய்து அருளுவார் சுக்கிர பகவான்!

சுக்ரன் உச்சமோ நீசமோ... எந்த நிலையில் இருந்தாலும் டயாபடிக் என்னும் சர்க்கரை நோயைத் தந்துவிடுவார்.

மேலும் தைராய்டு, டான்ஸில்ஸ், சிறுநீரகக் கோளாறு, கண்நோய், பார்வைக் கோளாறு, உமிழ்நீர் சுரப்பு பிரச்சினை என பலவற்றுக்கும் இவரே காரணம்.

பெண்களின் மாதவிடாய்ப் பிரச்சினைக்கும் இவரே காரணம்,

சரி... இதற்கு தீர்வுதான் என்ன?

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர் கற்பகாம்பாள் சமேத அக்னீஸ்வரர், சுக்கிரனின் பரிகார ஸ்தலம்.  இந்த ஆலயத்துக்குச்  சென்று தரிசித்து வந்தால், சுக்கிர பகவானின்  அருள் பரிபூரணமாகக் கிடைக்கப் பெறலாம்!

திருச்சி - ஸ்ரீரங்கம், மிக முக்கியமான சுக்கிர ஸ்தலம். இங்கு எந்த நாளில் வந்து வேண்டிக்கொண்டாலும் பலன் நிச்சயம். குறிப்பாக, வெள்ளிக்கிழமையில் ரங்கனையும் தாயாரையும் ஸேவிப்பது பன்மடங்கு பலத்தையும் பலன்களையும் தந்தருளும்!

மேலும் சென்னை மயிலாப்பூரில் கற்பகாம்பாள் கோயிலுக்கு அருகில் உள்ள வெள்ளீஸ்வரர் கோயிலும், சுக்கிரனின் அருளை அள்ளி வழங்கும் திருத்தலம்தான்.

வைஷ்ண ஆலயங்களில், ஸ்ரீலக்ஷ்மி தாயாருக்கு வெண்தாமரை மலர்கள் சார்த்தி, பூஜிப்பது அளப்பரிய செல்வங்களையும் சுக்கிர யோகத்தையும் வாரிவழங்கும்!

நவக்கிரகத்தில் உள்ள சுக்ர பகவானுக்கு வெள்ளை மொச்சை சுண்டல் செய்து நைவேத்தியம் செய்து தானம் வழங்குங்கள்.

பருவம் எய்தும் பெண் குழந்தைகளுக்கு ஆடை ஆபரணம் என ஏதாவது வாங்கிக் கொடுங்கள். இன்னும் வளமுடனும் நலமுடனும் பலமுடனும் வாழ்வதற்கு சுக்கிர பகவான் பேரருள் புரிவார்.

விஷ்ணு சகஸ்ரநாமம், மகாலக்ஷ்மி அஷ்டோத்திரம், ஆண்டாள் அருளிய திருப்பாவை முதலானவற்றைப் பாராயணம் செய்யலாம். அல்லது காதாரக் கேட்டு வரலாம். இதனால், செல்வ வளம் பெருகும். மகாலக்ஷ்மி உங்கள் வீட்டில் வாசம் செய்வாள்.

சுக்கிர பலத்தைப் பெறுவதற்கும் சுக்கிர யோகத்தை அடைவதற்கும் வீட்டிலேயே செய்யும் வழிபாடுகள் என்னென்ன, சின்னச் சின்ன தானங்களெல்லாம் எவை என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்!

- தெளிவோம்

 

 

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close