[X] Close

மீனம் - ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்


meenam-raaghu-kedhu

மீனம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 13:34 pm
  • அ+ அ-

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

மீன ராசி வாசகர்களே,

விருப்பு வெறுப்பின்றி அனைவரிடமும் அன்பாகப் பழகுபவர்களே! உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகு தரப்போகும் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து மன உளைச்சலைத் தந்துகொண்டிருந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்வதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். மகன் கூடாப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடுவார். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்துப் பங்கு கைக்கு வரும்.

குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். என்றாலும் ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்படக்கூடும். எனவே, அவரின் உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது.  வீட்டை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது, இடித்துக் கட்டுவது போன்ற பராமரிப்புச் செலவுகள் வந்துபோகும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைத் தாமதமின்றிச் செலுத்தப் பாருங்கள்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகு பகவான் செல்வதால் உங்களின் தோற்றப்பொலிவு கூடும். வற்றிய பணப்பை நிரம்பும். தங்க நகைகள் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். என்றாலும், வீண் அலைச்சல், செலவுகள், வாகன விபத்துகள், மறைமுக விமர்சனங்கள் வந்து செல்லும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை, இடமாற்றம் உண்டு.          

ராகு பகவான் தன் சுய நட்சத்திரமான திருவாதிரையில் 19.8.2019 முதல் 26.4.2020 வரை செல்வதால் எளிதாக முடிய விஷங்களைக்கூடப் போராடி முடிக்க வேண்டி வரும். எவ்வளவு தான் உழைத்தாலும் கெட்ட பெயர் தான் மிஞ்சுகிறது என்றெல்லாம் அலுத்துக்கொள்வீர்கள். உங்களின் கௌரவத்தைப் பாதிக்கும் சம்பவங்கள் நிகழக் கூடும். புதியவர்களை வீட்டுக்குள் அழைத்து வர வேண்டாம்.

செவ்வாயின் மிருகசிரீஷம் நட்சத்திரத்தில் 27.4.2020 முதல் 31.8.2020 வரை ராகு பகவான் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். தந்தையின் ஆரோக்கியம் சீராகும். சகோதரருக்கு வேலை கிடைக்கும். மூத்த சகோதரி உங்களைப் புரிந்துகொள்வார்.                     

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களுடைய ராசிக்குப் பதினோராவது வீட்டில் அமர்ந்துகொண்டு தொட்ட காரியங்களையெல்லாம் துலங்க வைத்த கேது பகவான் இப்போது 10-ம் வீட்டில் வந்தமர்வதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா அதை முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.

அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சின்னச் சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். புதியவர்களை வீட்டுக்கு அழைத்து வரவேண்டாம். வருங்காலம் குறித்த கவலைகள் வந்துசெல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த விசா கிடைக்கும். வேற்றுமதத்தைச் சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரை கேது பகவான் செல்வதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பிரபலங்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள்.

சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். வீட்டில் மங்கள இசை முழங்கும். விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். வி.ஐ.பி.க்கள் அறிமுக மாவார்கள். வேற்றுமொழியினர், மதத்தினர் உதவுவார்கள்.                     

கேது பகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை கேது செல்வதால் பணத்தட்டுபாடு, மன உளைச்சல், வீண் டென்ஷன், சலிப்பு வந்து போகும். முன்யோசனையில்லாமல் மற்றவர்களுக்கு உதவப் போய் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். 

இந்த ராகு- கேதுப் பெயர்ச்சி உங்களை ஓய்வெடுக்க முடியாதபடி கொஞ்சம் கசக்கிப் பிழிந்தாலும் இறுதியில் எல்லாம் நன்மைக்கே என்பதைப் புரியவைக்கும்.

செவ்வாய்க்கிழமையன்று முருகன் கோயிலுக்குப் போய் முருகரை வழிபடுவதுடன் வீட்டில் மீன் தொட்டி வைத்துப் பராமரியுங்கள்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close