[X] Close

விபரீத ராஜயோகம் தரும் திருத்தலங்கள்!


jodhidam-arivom-2-10

  • kamadenu
  • Posted: 01 Feb, 2019 10:50 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 10:  இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

விபரீத ராஜயோகம் குறித்து இன்னும் கொஞ்சம் பார்ப்போம்.

6ம் இடத்துக்கான தகவல்களையும் பரிகார ஆலயங்களியும் பார்த்தோம். இப்போது 8ம் இடத்திற்கான தகவல்களைப் பார்க்கலாம்.

8ம் இடம் குறித்து, ஏற்கெனவே பகிர்ந்ததை சுருக்கமாக நினைவுபடுத்துகிறேன்.

8ம் - இடம் வம்பு, வழக்கு, சிறை, கண்டம், ஆயுள் மற்றும் திடீர் அதிர்ஷ்டம் (நிலைக்காத அதிர்ஷ்டம் )

"நாம சும்மா இருந்தாலும் பிரச்சினை நம்மளைத் தேடிப் புடிச்சு வந்துருதே"

இதுதான் வம்பு நம்மைச் சுற்றி வளைப்பது என்பது. விபரீத ராஜயோகம் இல்லாதவர்கள் இந்த வம்புக்கு இரையாகி விடுவார்கள். யோகம் உள்ளவர்களுக்கு இந்த வம்பே நன்மையாகவும் மாறிவிடும்.

அடடே... அது எப்படி?

சாலையில் சென்று கொண்டிருக்கிறீர்கள். ஏதோ கூட்டம். என்ன நடக்கிறது என எட்டிப் பார்க்கிறீர்கள். திடீரென்று நீங்களே ஏதோ பஞ்சாயத்து பேசி சுமூகமாக்கி விடுகிறீர்கள். காப்பற்றப்பட்ட நபர் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் நன்மை செய்வார்.

அடுத்து வழக்கு.

வழக்கு என்றால் நீதிமன்றத்தை மட்டுமே நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும் என்பது இல்லை. பணிபுரியும் இடம், தொழிலகம், வீடு என எல்லாம் கூட, வழக்காடு மன்றம்தான்.

உங்கள் சக பணியாளர் உங்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் உங்களின்  உயரதிகாரியிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்கிறார். அதாவது,  போட்டுக் கொடுக்கிறார் என வைத்துக் கொள்வோம்.

யோகம் இருந்தால் -:

அந்த உயரதிகாரி உங்கள் சக பணியாளரை கண்டிப்பதுடன் அவருக்கு தண்டிப்பும் கிடைக்கும். உங்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கவும் இதுவே வழிவகைகள் செய்யும்.

(யோகம்இல்லை என்றால், நிச்சயமாக நீங்கள் பழிவாங்கப்படுவீர்கள்.) 

இது நீதிமன்ற வழக்குகளுக்கும் பொருந்தும், சொத்து வழக்கு முதல் எந்தவிதமான வழக்குகளும் உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமான தீர்ப்பே கிடைக்கும். வெற்றி உங்களுக்குத்தான்.

தண்டனை:- அதான் வழக்கே உங்களுக்கு சாதகம் ஆகும் போது தண்டனை எப்படி கிடைக்கும்.

ஆகவே அடுத்துப் பார்ப்போமா? . 

கண்டம் என்னும் உயிராபத்து:-

விபரீத ராஜயோகம் இருப்பவர்கள் எப்படிப்பட்ட ஆபத்திலிருந்தும் தப்பி விடுவார்கள். விமான விபத்தில் ஒருவர் மட்டும் தப்பித்த அதிசயத்தையும், சில வருடங்களுக்கு முன் திருச்சி அருகில் நடந்த பேருந்து விபத்தில் பேருந்து தீப்பற்றி எரிந்து அனைவரும் உயிரிழந்தனர், ஒருவர் மட்டும் பேருந்துக் கண்ணாடி உடைந்து அதன் வழியாக தூக்கி வீசப்பட்டு உயிர் பிழைத்த அதிசயமும் அனைவரும் அறிந்ததே.

அதுபோல எப்படியும்   மயிரிழையில் தப்பினார் என்ற ரகம்தான் இந்த விபரீத ராஜயோகம் பெற்றவர்களுக்கான யோகங்கள் ப்ளஸ் பலன்கள். எனவே உயிராபத்து என்னும் கண்டம் பற்றி கவலைப்படத் தேவையே இல்லை.

ஆயுள்:- தீர்க்காயுள்

திடீர் அதிர்ஷ்டம்:-

ஆமாம். 8ம் இடம் திடீர் அதிர்ஷ்டத்தைக் குறிக்கும். அதாவது லாட்டரி, குதிரை பந்தயம், சீட்டாட்டம், இன்சூரன்ஸ், வாரிசு இல்லாத சொத்தில் பங்கு இவை எல்லாம் திடீர் அதிர்ஷ்டத்தை குறிப்பிடும்.

நான் அறிந்த வரையில் லாட்டரி பரிசு பெற்றவர் எவரும் அந்த பணத்தை தக்கவைத்ததில்லை. அதேபோல குதிரை பந்தயம், சீட்டாட்டமும் இவற்றில் அடங்கும்!

இன்சூரன்ஸ் என்னும் காப்பீட்டுப் பணம் எதையாவது இழந்து தான் கிடைக்கும். அப்படி இழப்பில் கிடைக்கும் பணம் மனநிறைவை தருமா?

அதேபோல வாரிசு இல்லாத சொத்தின் பங்கு , பணம், சொத்து எதுவானாலும் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி உண்டாவதை தடுக்க முடியாது.

எனவே 9ம் இடம் என்னும் பாக்கிய ஸ்தானம் தருகின்ற வசதி வாய்ப்புகள் , சொத்துக்கள் தருகின்ற மன நிறைவை நிச்சயம் 8ம் இடமான திடீர் அதிர்ஷ்டம் நிச்சயமாகத் தராது. அது யோகத்தினால் கிடைத்தாலும் கூட நிறைவு இருக்காது. எனவே உழைப்பே உயர்வு தரும் என்பதை உறுதியாக நம்புங்கள்.

இந்த யோகம் உள்ளவர்கள், யோகத்தை மேலும் வலுப்படுத்தவும், இந்த யோகம் இல்லாதவர்கள் யோகத்தின் பலன்களை இறைவழிபாடு மூலம் பெறவும் சில ஆலயங்களுக்குச் சென்று தரிசிப்பதும் வழிபடுவதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும்!

காஞ்சிபுரம் அருகே வழக்கறுத்தீஸ்வரர் ஆலயம், கும்பகோணம் அருகில் உள்ள எமன் உயிர் பெற்ற ஸ்ரீவாஞ்சியம், திருச்சி அருகில் உள்ள திருப்பட்டூர் பிரம்மா ஸ்தலம், மற்றும் காஞ்சிபுரம் சித்ரகுப்தன் ஆலயம்.

மற்றும் சனி பகவான் எழுந்தருளியுள்ள திருநள்ளாறு , சுயம்பு வடிவான தேனி குச்சனூர் சனி பகவான், திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயம், கும்பகோணம் நாச்சியார்கோவில் அருகில் உள்ள திருநரையூர் குடும்ப சமேதராக உள்ள சனி பகவான்  என ஆலயங்களுக்குச் சென்று தரிசித்துப் பிரார்த்தியுங்கள்.

எல்லா எதிர்ப்புகளையும் வெல்லும் ஆற்றல் தருகிற, எப்படிப்பட்ட ஆபத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றுகிற ஸ்ரீபைரவர் தரிசனம் நூறுமடங்கு பலம் தரும்; பலன் கிடைக்கும்!

இவர்களை வணங்கி வாருங்கள். விபரீத ராஜயோக பலன்களை பெற்றிடுங்கள். வாழ்வை வளமாக்கிக் கொள்ளுங்கள்!

அடுத்து நாம் பார்க்க இருப்பது "நீச பங்க ராஜயோகம்"

நீசம் என்றால் என்ன? நீசம் என்றால் உதவி செய்யாதது (உதவாதது), பலம் இழந்து செயல்பட முடியாமல் இருப்பது.

அப்படியானல் நீசம் எப்படி நமக்கு உதவும்?

நமக்கு பலம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நம்முடைய தீவிரமான எதிரி பலமிழந்து இருப்பது நமக்கு பலம்தானே,.

- தெளிவோம்

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close