[X] Close

'விபரீத ராஜயோகம்'னா என்ன?


jodhidam-arivom-8

  • kamadenu
  • Posted: 25 Jan, 2019 10:33 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 8; இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வாசகர்களுக்கு வணக்கம்.

நாம் இப்போது பார்க்க இருப்பது விபரீத ராஜ யோகம்!

அதென்ன விபரீத ராஜயோகம்.

யோகம் என்றிருந்தால், விபரீதம் எப்படி இருக்கும்? விபரீதம் என்றிருக்கும் போது யோகம் எப்படி இணையும்?

விபரீதம் என்று நாம் எதைச் சொல்வோம்?

ஒரு செயல் அல்லது ஒரு பொருள் தன் இயல்பு நிலைக்கு மாறாக அல்லது எதிராக செயல்பட்டால் அது  விபரீதமாக செயல்படுகிறது என்போம்.

உதாரணமாக, பாம்பு எலியைக் உண்டால் இயல்பான நிகழ்வு. மாறாக எலி பாம்பைச் சாப்பிட்டால்.... நிச்சயமாக அது  விபரீதமான  நிகழ்வு தான், இல்லையா?

அதுபோல ஒரு கிரகம், தான் என்ன செய்ய வேண்டுமோ அல்லது தான் என்ன தர வேண்டுமோ அதற்கு எதிராக பலன்களைத் தந்தால் அது விபரீதம் என்று அழைக்கப்படும்.

இப்போது ஜாதக விபரத்திற்குள் செல்வோமா?

ஒரு ஜாதகத்தில் 6 ம் இடமும், 8ம் இடமும் பாதகம் அல்லது துன்பத்தை தரும் இடங்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதை மறைவு ஸ்தானம் என்றும் குறிப்பிடுவார்கள்.

அந்த இடத்தின் அதிபதிகளும் பாவத்தையே செய்வார்கள்; தருவார்கள்.

இப்படி பாவத்தை, வேதனையைத் தரும் கிரகங்கள், தான் தர வேண்டிய துன்பங்களைத் தராமல் நன்மைகளை, யோகங்களை வாரி வழங்கினால் அது   விபரீதம்தானே. அதிர்ச்சியில் இது ஆனந்த அதிர்ச்சி அல்லவா!

ஆனால்...  கெடுதல் தர வேண்டியவர் எப்படி நன்மைகளை வழங்க முடியும்?

உங்கள் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் லக்னம் என்பதை சுருக்கமாக "ல" என குறிப்பிட்டிருப்பார்கள்.

அதை ஒன்று என எண்ணத் தொடங்கி அதிலிருந்து 6வது கட்டமும், 8 வது கட்டமும் குறித்துத்தான் ஆராயப் போகிறோம்.

அதற்கு முன் 6வது இடமும், 8வது இடமும் என்ன செய்யும் என்பதைப் பார்ககலாம்.

6 வது இடம்:-- இதுதான் உங்களுக்கு இருக்கிற நோயை, கடன்களை,எதிரிகளை, உங்கள் வேலையை, உழைப்பைக் காட்டும் இடம்!

8வது இடம்:-- இது உங்கள் ஆயுளை, வம்பு வழக்குகள், அவமானம், சிறை, கண்டம் என முக்கிய விஷயங்களைக் காட்டும் இடம்.

இந்த 6, 8, அதிபதிகள் அந்த 6, 8 வீட்டில் மட்டுமல்ல வேறு எந்தக் கட்டத்தில் இருந்தாலும் அந்த ராசிக் கட்டத்தின் தன்மைக்கேற்ப தன் கெடு பலன்களைத் தரும்.

ஆனால், இவர்களுக்குள்ளாகவே    (சீட்) மாறி அமர்ந்தால்?

 அதாவது 6 ம் வீட்டின் அதிபதி 8ம் வீட்டிலும், 8ம் வீட்டின் அதிபதி 6ம் வீட்டிலும், என்று தங்களுக்குள்ளாகவே மாறி அமர்ந்தால் என்னாகும்?

இப்படி இவர்கள் இருவரும் தங்கள் வீடு மாறி அமர்ந்தால் அதுதான்  விபரீத ராஜயோகம். இதைத்தான் ஜோதிடம் பழமொழியாக சொல்லி நமக்கு மிக எளிதாக புரியவைத்துள்ளது. அது... "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்!" 

அதாவது 6 ம் இடத்து கெட்டவன் மற்றொரு 8ம் இடத்து கெட்ட ஸ்தானத்தில் மறைவது நன்மையை ஏற்படுத்தும்.

கணித விதி ஒன்றை உதாரணமாகக் குறிப்பிடுகிறேன்.  

 - x - = + என்பது போல, ஒரு மறைவு ஸ்தானாதிபதி மற்றொரு மறைவு ஸ்தானத்தில் மறைவு பெற இந்த  விபரீத ராஜயோகம் வேலை செய்யும்.

சரி... இந்த விபரீத ராஜயோகம், என்ன மாதிரியான யோகத்தைத் தரும் என பார்ப்போம்.

" நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்."

16 வகையான செல்வங்கள் இருந்தாலும், "நோய்" என ஒன்று வந்து விட்டால் அத்தனை செல்வங்களும் வீண்தானே!

நோய் பற்றிய கவலை தன்னை மட்டுமல்ல குடும்பத்தாரையும் கவலையில், மீளாத்துயரத்தில் கொண்டுவந்து நிறுத்திவிடும்.

ஆனால் இந்த "விபரீத ராஜயோகம்" இருந்தால்....நோய் பற்றிய பயமோ கவலையோ, அட அவ்வளவு ஏன் வியாதியே உங்களைக் கண்டு அஞ்சும். உங்கள் பக்கத்தில் கூட வராது.  உங்களை நெருங்க பயந்து, வியாதிக்கே குளிர்ஜூரம் வந்துவிடும்.

ஒரு சிறிய விளக்கம் தருகிறேன். சரியா என நீங்களே யோசித்து பாருங்கள்.

 காய்ச்சல் என நினைத்து டாக்டரிடம் போனால், " காய்ச்சலா? அதெல்லாம் ஒன்றும் இல்லையே" என சிரித்தபடியே வழியனுப்பிவைப்பார். இது சரிதான் என்பவர்கள் உங்கள் பதிலை கமெண்ட்டில் தாருங்கள்.

எனவே நோய் பற்றிய பயம் தேவையில்லை.

 அடுத்து மிக முக்கியமானது கடன்.

வியாதியானது உடலை வருத்தியெடுத்துவிடும். இந்தக் கடன், உள்ளத்தையே அறுத்து ரணமாக்கிவிடும். நம் மொத்த நிம்மதியையும் குலைத்துப் போடும். இடி விழுந்தது போல் கதறச் செய்யும். எப்போதும் கண்ணீர் விடச் செய்யும். துக்கத்திலேயே புரளச் செய்யும். தூக்கத்தை இழக்க வைக்கும். ( தூக்கம், ஒட்டு மொத்த உடல், உள்ளம், ஆன்மா என அனைத்தையும் சமநிலையில் வைக்கும் யோக நிலை).

" கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்று ராவணனின் மனநிலையை கடன் பட்டவன் மனநிலையுடன் ஒப்பிட்டு கம்பர் குறிப்பிடுகிறார் என்றால் கடன் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது, மோசமானது என்பதை அறிந்து உணரலாம்.

சரி, கடன் அடையுமா?,  கடன் தீருமா? என்று கேட்பவர்களுக்கு...

எவ்வளவு வேண்டுமானாலும் கடன் வாங்குங்கள் என பரிந்துரைக்கிறேன்.

என்ன இப்படிச் சொல்றீங்க? கடனை வாங்கிக்கிட்டே இருந்தா, எப்படி அடைக்கிறதாம்? கடனைத் தீர்க்க வழி சொல்லாம, கடன் வாங்க ஐடியா கொடுக்கறீங்களே? என்று குழம்புகிறீர்கள்தானே!

சொல்றேன் சொல்றேன்!

- தெளிவோம்


 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close