[X] Close

சிக்கல் தீர்ப்பார் மயிலை சிங்காரவேலர்! 


sikkal-theerpar-singaravelar

  • வி.ராம்ஜி
  • Posted: 06 Apr, 2018 10:57 am
  • அ+ அ-

மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயிலில், சிங்காரவேலரைத் தரிசித்திருக்கிறீர்களா? கொள்ளை அழகுடன் காட்சி தரும் இவரை வணங்குங்கள். சிக்கல்களையெல்லாம் தீர்த்தருள்வார் சிங்காரவேலர்!    

அழகன் முருகனைப் போலவே கோயிலின் கோபுரமும் அழகு. ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில் ராஜ கோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இதன் உயரம் சுமார் 40 மீட்டர். ஏழு நிலைகள் மற்றும் ஒன்பது கலசங்கள் கொண்டு திகழும் இந்த கோபுரம், கி.பி. 1902-ஆம் வருடம் கட்டப்பட்டது!

   ராஜகோபுரம் அழகிய சுதைச் சிற்பங்கள் நிறைந்தது. இந்த கோபுரத்தில்- பகீரதன் தவம், அட்ட வீரட்டங்கள், காளி கர்வபங்கம், திருஞானசம்பந்தர், அப்பர், அப்பூதியடிகள் மற்றும் கண்ணப்பர் ஆகியோரது வாழ்க்கைச் சம்பவங்கள், பிட்டுக்கு மண் சுமந்த ஈசனின் திருவிளையாடல்கள் உட்பட சுமார் 150-க்கும் மேற்பட்ட புராணக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த கோபுரத்தில் ‘சிவ பராக்கிரமம்’ எனும் நூல் குறிப்பிடும்- மச்சாரி, கூர்மாரி, நரசிம்மாரி ஆகிய சிவ வடிவங்களின் சிற்பங்களும் அழகுறக் காட்சி தருகின்றன!

  முக்கியமாக... ரிஷப குஞ்சரம் சிற்பம். ஒரு பக்கம் காளை, மறு பக்கம் யானை உருவில் காட்சி தரும் அபூர்வ சிற்பம் இது.  காளையின் மீது சிவ- பார்வதி, யானையின் மீது திருமகள்-மகாவிஷ்ணு அமர்ந்திருப்பது போல் வடிவமைத்துள்ளனர். காளை மீது அமர்ந்த நிலையில் தன்னிடம் திருவோட்டை நீட்டும் ஈசனாருக்கு மகாலட்சுமி அன்னமிடுவது போன்ற காட்சி அற்புதம். உமையவளின் மடியில் விநாயகர் அமர்ந்திருப்பது விசேஷம்!

  கிழக்குப் பார்த்தபடி, கடற்கரையை நோக்கியபடி அமைந்திருக்கும் கோபுரத்தையும் அதன் அழகையும் சில நிமிடங்கள் பார்த்தால் போதும்... நம் துக்கமெல்லாம் பறந்தோடிவிடும்!

 கோயிலின் தெற்குப் பிராகாரத்தில்  அரசாட்சி நடத்துகிறார் ஸ்ரீசிங்காரவேலர்.  ஆறு முகங்கள், பன்னிரு கரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார் ஸ்ரீசிங்காரவேலர். இரு புறமும் யானையின் மீது அமர்ந்த கோலத்தில் ஸ்ரீவள்ளி- தெய்வானையுடன் அழகு ததும்பக் காட்சி தருகிறார் அழகன் முருகன்!

  இந்த சந்நிதியின் முன்புறம் 14 தூண்கள் கொண்ட ஒரு மண்டபம் உள்ளது. இதில் கொடி மரம், மயில் வாகனம் மற்றும் பலி பீடம் ஆகியன உள்ளன.

 - துடியேற்ற செங்கைக் கபாலீசர் மைந்தன், பூரணீ மாமகன், விமலையன் பால் பெற்ற திருமகன், குசலர்க்கதிபதி, சங்கரன் பாலகன், மீனேறுயரிய காமார்க்கு மைத்துனன், வாலிச் சரவணன், விடையர் திருமகன், கார்த்திகைப்பால் முலைமாரியுண்டருள் சிங்கார வேலவர், கார்த்திகையார் மைந்தன், கந்தன், சேந்தன், முடுகிய மஞ்ஞையை யூர்ந்தருள் ஆறுமுகன், ஆறுமாமுகன் என்றெல்லாம் போற்றுகிறார் திருமயிலைக் கோவையூர் அம்பலவாணக் கவிராயர். அருணகிரிநாதர், சிங்காரவேலரை சிறப்பித்து திருப்புகழ் பாடல்கள் பலவும் பாடியுள்ளார்.

  சிங்கார வேலர் சந்நிதிக்கு வந்து அவரை தரிசித்து, கண்மூடி வேண்டிக் கொண்டால் போதும்... நம் சிக்கல்கள் யாவும் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம்!

சிக்கல் தீர்க்கும் மயிலாப்பூர் சிங்காரவேலரைத் தரிசிப்போம். கவலையில் இருந்தும் துக்கத்தில் இருந்தும் விடுபட அருள்வார் வேலவன்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close