[X] Close

நினைத்ததை நிறைவேற்றும் மயிலம் முருகன்! முருகனின் வேல்; தடுத்து நிறுத்திய சித்தர்!


thai-poosam-spl

முருகப்பெருமான்

  • வி.ராம்ஜி
  • Posted: 20 Jan, 2019 12:39 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

தைப்பூசம் ஸ்பெஷல்

திண்டிவனம் அருகில் உள்ள மயிலம் முருகனை வழிபட்டால், நினைத்ததெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வார் முருகப்பெருமான்!

  சைவத்தைப் பரப்புவதற்காக, சிவகணங்களில் ஒருவரான சங்குகன்னர், பொம்மபுரம் (தற்போதைய பொம்மையர் பாளையம்) கடற்கரைப் பகுதியில் பத்து வயது பாலனாக பிரசன்னமானார். நெற்றியில் திருநீறு, அதற்கு மேல் உத்திராட்சம், குண்டலம் அணிந்த காதுகள், சின்முத்திரையுடன் கூடிய வலக் கை, திருநீற்றுப் பையைத் தாங்கிய இடக் கை, முகத்தில் புன்முறுவல், எப்போதும் ‘நமசிவாய’ என உச்சரிக்கும் உதடுகள்... எனும் தோற்றத்துடன் வெளிப்பட்ட அவர், அருகிலிருக்கும் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று சைவ நெறியை உணர்த்தினார். பல ஸித்து வேலைகளையும் அந்த வயதிலேயே செய்ததால் அவருக்கு ‘பாலசித்தர்’ என்று பெயர் வந்தது. தான் பிரசன்னமான கிராமத்தில் அவர் ஒரு மடம் அமைத்தார். ‘பொம்மைய பாலசித்தர் மடம்’ என அது அழைக்கப்பட்டது.

சைவ நெறியை அந்த மடம் பரப்பிய நேரத்தில் சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஆரம்பமாயின. ஒருநாள் பாலசித்தரைத் தேடி வந்த நாரதர், மயூராசலம் மற்றும் சூரபத்மன் குறித்து எடுத்துக் கூறி, ‘‘நீங்களும் மயிலம் மலையில் முருகனை நோக்கித் தவமிருந்தால் நினைத்த செயல்கள் கைகூடும்!’’ என அருளினார். அவ்வாறே பாலசித்தர் மயிலம் வந்து முருகனை நோக்கி பலகாலம் தவம் புரிந்தார். ஆனால் முருகன் அருள் கிடைக்கவில்லை. இதனால் அக்னியை உருவாக்கி அதன் நடுவிலிருந்தபடி உக்கிர தவம் புரிந்தார் பாலசித்தர். அப்போதும் முருகன் காட்சி தரவில்லை.

இந்த நிலையில் வள்ளி-தெய்வானையை நோக்கி தவம் புரிந்தார் பாலசித்தர். அதனால் தேவியர் இருவரும் பாலசித்தருக்கு அருள் புரியுமாறு முருகனிடம் வற்புறுத்தினர். ‘‘அதற்குரிய நேரம் வரும்போது செய்கிறேன்!’’ என்றார் முருகன். இதனால் கோபமான தேவியர் இருவரும் ஊடல் கொண்டு முருகனைப் பிரிந்து மயிலம் வந்தனர். பாலசித்தரை அணுகிய அவர்கள்,‘‘எங்கள் இருவரையும் உங்கள் மகள்களாகக் கருதிப் பாதுகாக்க வேண்டும்!’’ என்று சொல்லி அந்த மலைமீது ஒரு மாளிகையை எழுப்பி அதில் வசித்தனர். பாலசித்தர் அவர்களுக்குப் பணிவிடைகள் செய்ததுடன் அவர்களுக்குக் காவலாகவும் இருந்தார்.

காலம் கடந்தது. முருகப்பெருமான், ஓர் அரசர் போல வேடமிட்டு போர்க்கோலம் பூண்டு மயிலம் வந்து சேர்ந்தார். அவர் நேராக வள்ளி-தெய்வானை வசிக்கும் மாளிகைக்குள் நுழைய முயன்றார். பாலசித்தர் அவரை உள்ளே நுழைய விடாமல் தடுத்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது போராக மாறியது. தேவியர் இருவரின் அருளோடு சித்தர் போரிட்டார். முருகன் அவரை எதிர்கொண்டார். எவருக்கும் வெற்றி- தோல்வி கிட்டாமல் போர் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் முருகன் தனது சக்தி வாய்ந்த வேலாயுதத்தை சித்தர் மீது ஏவினார். அதையும் தன்வசப்படுத்தினார் பாலசித்தர். அதையடுத்து, அரசராக வந்திருப்பது முருகப் பெருமான் என்பது சித்தருக்கு விளங்கியது. எனவே, முருகனின் தாள் பணிந்து தன் குற்றத்தை மன்னித்து அருளுமாறு வேண்டினார். முருகன் அவருக்குக் காட்சியளித்து ஞானோபதேசம் வழங்கினார். தேவியர் இருவரையும் அழைத்து வந்த சித்தர், ‘‘என் மகள்களாக இவர்களைப் பாதுகாத்து வருகிறேன். தாங்கள் இவர்களை இங்கு மணமுடிக்க வேண்டும். பின்பு மணக்கோலத்தில் எந்த நாளும் இந்தத் தலத்தில் காட்சி தர வேண்டும்!’’ என  விண்ணப்பித்தார்.

தேவர்கள் புடைசூழ முருகன்- வள்ளி- தெய்வானை திருமணம் கோலாகலமாக நிகழ்ந்தது. அப்போது சிவபெருமான், ‘‘இன்னும் பல்லாண்டு காலம் நீ சைவத்தைத் தழைக்கச் செய்த பின், சந்நிதிக்கு வலப்பக்கத்தில் ஜீவ சமாதி அடைவாயாக!’’ என பாலசித்தருக்கு ஆசி வழங்கினார். அதன்படி சைவம் தழைக்கப் பாடுபட்ட பாலசித்தர், ஓர் ஆனி மாதம் திருவாதிரை நாளில் முருகனின் வலப்பக்கம் சிவயோக சமாதி அடைந்தார். இன்றும் அந்த இடத்தில் லிங்க வழிபாடு தொடர்கிறது.

சிவ நெறித் தொண்டு மேற்கொண்டு வந்த ஒரு தம்பதியின் மகனைத் தன் சீடனாக ஏற்று, அவருக்கு ‘சிவஞான பாலய தேசி கன்’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பாலசித்தர். இந்தச் ‘சீட மரபு’ தற்போதும் தொடர்கிறது. சிவநெறியின் வழிவரும் பெரி யவர்கள் தொடர்ந்து ‘சிவஞான பாலய சுவாமிகள்’ என்ற பெயர் பெற்று இங்கு சைவ சமயத்துக்குத் தொண்டாற்றி வருகிறார்கள். இவர்களது ஆளுகையின் கீழ் இருக்கும் ‘திருக்கயிலாய பரம்பரை மயிலம் பொம்மபுரம் ஆதீனம்’தான் மயிலம் கோயிலை நிர்வகித்து வருகிறது.

மலை ஏறும் படிக்கட்டுகள் செங்குத்தாக இல்லாமல், வயதானவர்களும் சிரமமில்லாமல் ஏறும் விதமாக அமைந்திருப்பது விசேஷம். இந்தத் திருக்கோயிலுக்கு பதினோரு தீர்த்தங்கள் இருப்பதாக ஐதீகம். இவற்றுள் ஒன்று அக்னி தீர்த் தம். இது மலைக்குத் தென்கிழக்கில் உள்ளது. இதில் நீராடியோ, அல்லது இதன் நீரைத் தலையில் தெளித்துக் கொண்டோ, குளக்கரையில் இருக்கும் சுந்தர விநாயகரை வழிபட்டு மலையேறுகின்றனர்.

தைப்பூச விழாவின்போது பக்தர்கள் இந்தக் குளக்கரையில் இருந்துதான் காவடி எடுப்பார்கள். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி என விதவிதமான காவடிகளைச் சுமந்தபடி நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆடிப் பாடி மலையேறுவார்கள்!

மண்டபத்தைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் முதலில் இருப்பவர் விநாயகர். அடுத்து, பாலசித்தர் ஜீவ சமாதி அடைந்த ஆலயம். பொதுவாகவே சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த தலங்களில், சாந்நித்தியம் மிகுந்திருக்கும் என்பது நம்பிக்கை. எவரிடமும் சரணடையாத முருகனது வேலாயுதம், பாலசித்தரிடம் வசமானது அல்லவா!  இன்றைக்கும் மயிலத்தில் நடக்கும் கந்த சஷ்டி விழாவின்போது சூரசம்ஹாரத்துக்குக் கிளம்பும் முருகர், பாலசித்தரிடமிருந்தே வேலாயுதத்தைப் பெற்றுச் செல்கிறார்.

பாலசித்தருக்கு அடுத்து மூலவர் காட்சி தருகிறார். வள்ளி- தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தரும் முருகனின் ஒரு கையில் வேல். இன்னொரு கையில் சேவற்கொடி. பெரும்பாலான கோயில்களிலும் முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும். இங்கு மட்டும் வடக்குத் திசையை நோக்கியபடி இருப்பது சிறப்பு.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ளது மயிலம். திண்டிவனத்தில் இருந்தும் விழுப்புரத்தில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close