சிலருக்கு அன்பை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாது. சிலர் அப்பாவுக்கு என் மீது அன்பே இல்லை என்று கூறுவதுண்டு. அக்கறை என்பது உணரப்பட வேண்டுமே அன்றி, வெளிக்காட்டப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இப்படித்தான் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் ஆன பந்தம்.
கிருஷ்ணருக்கு எப்போதும் தன் பக்தர்களின் நலன் குறித்த கவலை. ஆனால், பக்தர்களுக்கு / ஜீவாத்மாக்களுக்கு, பரமாத்மாவுக்கு தன்னைப் பற்றிய கவலை இல்லை என்ற எண்ணம் எப்போதும் உண்டு.
ஜீவாத்மாக்கள் எந்த அளவில் தன் மனதில் உள்ளார்கள் என்பதை விளக்க பரமாத்மா நடத்திய ஒரு நாடகம் இதோ...
ஒரு வைகுண்ட ஏகாதசி நாளில் அனைவரும் (மகரிஷிகள், பக்தர்கள் பலர்) கிருஷ்ணரை தரிசிக்க துவாரகை வந்தபோது, கிருஷ்ணர் தனக்கு தலைவலி வந்தது போல் இருக்கிறார். மருத்துவர்கள் என்ன செய்தும் தலைவலி நீங்கிய பாடில்லை.
அப்போது நாரதர், ருக்மிணி, பாமா மூவரும் சென்று கிருஷ்ணரிடமே சென்று தலைவலி நீங்க என்ன வழி என்று கேட்கின்றனர். அதற்கு கிருஷ்ணரும், தன் பக்தர்களின் பாதத்துளிதான் மருந்து என்கிறார்.
இதுகேட்டு அனைவரும் அதிர்ந்தனர். யாரும் பாதத் துளியைத் தர தயாராக இல்லை. அப்படி செய்வது பாவம் என்று கருதினர்.
ஆனால், பிருந்தாவனத்தில் இருந்த கோபியர், நாரதர் இதுகுறித்து சொன்னதும் உடனே, தங்களுக்கு பாவம் கிட்டினாலும் பரவாயில்லை, கிருஷ்ணரின் தலைவலி நீங்கினால் போதும் என்று உடனே சம்மதிக்கின்றனர்.
நாரதரும் கீழே ஒரு துணியை விரித்து, அனைத்து கோபியரும் அதில் நடந்து செல்லுமாறு கூறுகிறார். அதன்படி சேமித்த பாதத் தூசியை அப்படியே கட்டி எடுத்துக் கொண்ட நாரதர், கிருஷ்ணரிடம் கொடுக்கிறார்.
அந்த கோபியரின் பாதத்துளியை, தனது நெற்றியில் கிருஷ்ணர் பூசியதும் தலைவலி சென்று விடுகிறது.
இதன் மூலம் ஜீவாத்மாக்கள் பரமாத்மாவால் எப்போதும் நேசிக்கப்படுகிறார்கள் என்பது புனலாகிறது. மேலும், அவன் திருவடி சரணம் என்ற பக்தனின் திருவடி மகிமையும் உணரப்படுகிறது.
வேதாத்திரி மகரிஷியின் சிறு வயதில் அவரது தாய் அவருக்கு பக்திக் கதைகளைக் கூறுவதுண்டாம். இப்படி எண்ணற்ற மகான்கள் சிறுவயதில் கேட்ட விஷயங்களே பிற்காலத்தில் அவர்கள் எப்போதும் இரையைத் தேடாமல், இறையைத் தேட ஏதுவாகிறது.
ஓம் நமோ நாராயணாய...