அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டும் பணி, இம்மாதம் மாதம் 2-வது வாரத்திலிருந்து தொடங்குகிறது.
கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டு வேலைகள் பூர்த்தியாகிவிட்டன. பணியை ஒருங்கிணைத்து விரைவுபடுத்த, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து கோயில் கட்டுமான நிபுணர்கள் அயோத்திக்கு வந்துள்ளனர். கட்டுமானப் பணிக்காக 4 லட்சம் கன அடி கல் பயன்படுத்தப்படவுள்ளது. ஏற்கெனவே, 60 ஆயிரம் கன அடி அளவுக்குத் தூண்கள் உள்ளிட்ட வேலைகள் செய்து முடிக்கப்பட்டுவிட்டன.
கோயிலின் கருவறை அமையவுள்ள இடத்தில், பூமி நெகிழ்வுத்தன்மையுடன் இருந்ததாலும் அந்த இடத்தில் ஏராளமான கட்டிடச் சிதைபாடுகள் புதையுண்டு இருந்ததாலும் அவற்றை அகற்றி, அந்த இடத்தை சிமென்ட் உள்ளிட்ட பொருட்களாலான கலவையைக் கொண்டு கெட்டிப்படுத்த அதிக நாட்கள் தேவைப்பட்டன. இதனால், ஏற்கெனவே திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்பட்டது. ராமஜன்ம பூமி ஷேத்திர அறக்கட்டளை சார்பில் அதன் உறுப்பினர் அனில் மிஸ்ரா, செய்தியாளர்களிடம் இன்று இத்தகவல்களைத் தெரிவித்தார்.