இந்த ஆண்டும் விநாயகர் ஊர்வலம் இல்லை!


மூடப்பட்ட விநாயகர் சிலைகள்

‘கரோனா காரணமாய் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் கூடாது. பெரிய விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கக் கூடாது, சிறிய விநாயகர்களை வீட்டில் வைத்து வழிபாடு நடத்திவிட்டு ஓரிருவர் மட்டும் அதைக் கொண்டுபோய் நீர்நிலைகளில் கரைக்கலாம்’ என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு இப்படி அறிவித்தாலும், சதுர்த்தி வழிபாட்டுக்காக பெரிய விநாயகர்களை செய்து வைத்துள்ள வியாபாரிகள் அதை ஆர்டர் செய்தவர்கள் வாங்கிச் செல்வார்கள், பொது இடங்களில் வழிபாடு நடக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தனர். அதற்காக, சென்ற ஆண்டு செய்து வைத்திருந்த விநாயகர் சிலைகளையே சுத்தப்படுத்தி வர்ணம் பூசி தயார்படுத்தினர்.

ஆனால், பெரிய விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்க அனுமதியில்லை என்று அரசு அறிவித்த பிறகு, இந்த வியாபாரிகள் தாங்கள் செய்துவைத்திருந்த சிலைகளையெல்லாம் பாலிதீன் கவர்கள் போட்டு மூடி வைத்தனர். இருப்பினும், அதையெல்லாம் முழுமையாக தயார் செய்து வைக்கும்படி ஆர்டர் செய்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனராம். ‘‘அரசு என்ன உத்தரவிட்டாலும், போலீஸார் தடுத்தாலும் பெரிய விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவோம்!’’ என்று அவர்கள் சொல்லி வருகின்றனர்.

இதுகுறித்து கோவையைச் சேர்ந்த மண் சிற்பக்கலைஞர் அழகப்பன் கூறும்போது, ‘‘இதுவரை நான் செய்தது 16 பெரிய சிலைகள். ஆர்டர் தந்தவர்கள் அதை நிச்சயம் வாங்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். அதற்காக ஃபினிஷிங் செய்து மூடி வைத்துள்ளேன். அதை ஆர்டர் கொடுத்தவர்கள் எடுத்துச் செல்வார்களா, இல்லையா என்பது விநாயகர் சதுர்த்தி அன்றுதான் தெரியும். பெரிய சிலைகள்தான் போகவில்லையே தவிர, மற்றபடி வழக்கம்போல் சின்னச் சிலைகளை வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்று கொண்டுதான் இருக்கின்றனர்!’’ என்றார்.

x