தனி புத்தகமாக வெளியாகிறது மதுரை மீனாட்சியம்மன் கோயில் கல்வெட்டுகள்


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் படியெடுத்த காட்சி (ஆவணப் படம்)

இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் இருப்பதைப் போல, தமிழ்நாட்டில் அதிகமான கல்வெட்டுகள் மதுரையைச் சுற்றியே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, மதுரையைச் சுற்றியுள்ள 7 குன்றுகளிலும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. இதில், மீனாட்சி அம்மன் கோயில் உள்ள கல்வெட்டுகள் அனைத்தையும் படியெடுத்துப் புத்தகமாக வெளியிடும் முயற்சியில் அறநிலையத்துறை ஈடுபட்டது.

இதற்கான பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. மதுரையில், தொல்லியல் துறை உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்ற சாந்தலிங்கம் தலைமையிலான குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர். இந்தப் பணிகள் முடிவடைந்தும், அது புத்தகமாக வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, அந்தக் கல்வெட்டுப் பிரதிகளை எல்லாம் தொகுத்து புத்தகமாக வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு மதுரை மக்களும், வரலாற்று ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஓய்வுபெற்ற தொல்லியல் அலுவலரும், பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலாளருமான சாந்தலிங்கம் கூறியதாவது:-

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மொத்தம் 410 கல்வெட்டுகள் உள்ளன. அதில் 90 கல்வெட்டுகள் பெரியவை. மற்றவை அனைத்தும் ஓரிரு வரிகள் மட்டுமே கொண்ட சிறு கல்வெட்டுகள். இந்தக் கல்வெட்டுகளின் மூலம் தற்போதுள்ள மீனாட்சியம்மன் கோயிலானது கி.பி.12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பதை அறிய முடிகிறது. முதலாம் ஜடவர்மன் குலசேகரன் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயிலை, அவரைத் தொடர்ந்து பல பாண்டியர்கள் விரிவுபடுத்தியுள்னர். பாண்டியர், விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர் கால கல்வெட்டுகள் இந்தக் கோயிலில் இருக்கின்றன.

கல்வெட்டு தரும் செய்திப்படி, இங்குள்ள அம்மன் அக்காலத்தில் திருமாக்கோட்டமுடைய ஆளுடைய நாச்சியார் என்றே அழைக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறியலாம். அதேபோல சுவாமியின் பெயர் சுந்தரேஸ்வரர் எனறு இல்லாமல் ஆலவாய் உடைய நாயனார் என்றே உள்ளது. 19-ம் நூற்றாண்டில்தான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்று சமஸ்கிருதப் பெயர் வந்திருக்கிறது.

கோயில் கல்வெட்டுகளை 4 மாதத்திலேயே படியெடுத்துவிட்டோம். ஆனால், புத்தகமாக வெளிவருவது தாமதமாகிக்கொண்டே இருந்தது. அமைச்சர் சேகர்பாபுவின் அறிவிப்பு மகிழ்ச்சி தருகிறது. இந்தக் கல்வெட்டுகள் புத்தகமாக வெளிவந்தால், இக்கோயிலில் கடந்த 800 ஆண்டுகளில் என்னனென்ன திருப்பணிகள் நடந்துள்ளன, எந்தெந்த மன்னர்கள், செல்வந்தர்கள் இப்பகுதியில் செல்வாக்குடன் வாழ்ந்தார்கள், அவர்கள் கோயிலுக்குக் கொடுத்த கொடைகள் என்னென்ன போன்ற வரலாற்றை மிகத்துல்லியமாக மக்கள் அறிந்துகொள்ள முடியும். கூடவே, இக்கோயில் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதுபோன்ற வதந்திகள் மட்டுப்பட்டு, உண்மை வரலாறு உள்ளது உள்ளபடியே பரவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை எதிரே உள்ள அறநிலையத் துறைக்குச் சொந்தமான 9.47 ஏக்கர் நிலம்.

தமிழக சட்டப்பேரவையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு இன்று மதுரை தொடர்பான மேலும் சில புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார். அதில் மதுரையில் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.35 கோடியில் கட்டப்படும். எல்லீஸ்நகரில் உள்ள கோயில் நிலத்தில் ரூ.2 கோடியில் வணிக வளாகம் கட்டப்படும். ஆலங்குளத்தில் உள்ள மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூ.50 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டப்படும். கோயில் அருகே வாகன நிறுத்துமிடம் ரூ.15 லட்சத்தில் மேம்படுத்தப்படும். அழகர்கோயில் சோலைமலை முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக மலைப்பாதையை மேம்படுத்துதல் மற்றும் உட்கட்மைப்பை உருவாக்கும் பணிகள் ரூ.7 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். அழகர்கோயில் கள்ளழகர் கோயிலில் விருந்து, காதுகுத்து மற்றும் முடி காணிக்கை மண்டபங்கள் ரூ.9 கோடியில் கட்டப்படும் போன்றவை முக்கியமானவை.

மதுரை உயர் நீதிமன்றக் கிளை எதிரே, கோதண்டராமர் கோயிலுக்குச் சொந்தமான 9.49 ஏக்கர் நிலம் உள்ளது. அதன் அருகிலேயே மற்றொரு 4 ஏக்கர் நிலமும் உள்ளது. அங்கு, ஒரு கல்வி நிறுவனமோ, பெண்களுக்கான மருத்துவமனையோ அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்தனர். அந்த அறிவிப்பு இல்லாதது உள்ளூர் மக்களுக்கு ஏமாற்றமளிக்கிறது.

x