[X] Close

கஜகேசரி யோகம்... அருளும்பொருளும் தரும்!


jodhidam-arivom-6

  • kamadenu
  • Posted: 18 Jan, 2019 10:05 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் (2) 6: இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே , இப்போது கஜகேசரி யோகம் பற்றி பார்க்கப் போகிறோம்.

கஜம் என்றால் யானை.

கேசரி என்றால் சிங்கம்.

அசைந்து வரும் மலை போன்ற யானையை, சிங்கமானது எந்த பயமும்  பதட்டமும் இல்லாமல் அனாயசமாக வீழ்த்துவதைப் போல், இந்த கஜகேசரி யோகமுடையவர்கள் எந்த பிரச்சினை வந்தாலும் சற்றும் அசராமல் அநாயசமாக கடந்து செல்வார்கள். இதுதான் கஜகேசரி யோகக்காரர்களின் மிக முக்கியமான யோகம். துணிவு. தெளிவு. ஸ்பெஷாலிட்டி. தனித்துவம்.

ஆனால் இது எப்படி? எப்போது வரும்? எந்த மாதிரி வேலை செய்யும்?

 இதுதான் ஆசையும் ஏக்கமும் கொண்ட வாசகர்களின் கேள்வி. சரிதானே?

மற்ற யோகம் எல்லாம் அந்தந்த திசா புத்தியின் காலத்தில்தான் நடக்கும். ஆனால் இந்த கஜகேசரி யோகமானது "பிறப்பு முதல் கடைசி வரை" தன் முழு பலனையும் தரும்.

உதாரணமாக ஒரு குழந்தை பிறக்கும்போது கஜகேசரி யோகத்தில் பிறந்திருந்தால் அவருடைய தந்தைக்கு 12 வருடம் வரை நல்ல பலனைத் தரும். உங்களுக்குக் குழந்தை பிறந்த 12 வருடங்களில் அடுத்தடுத்து நல்ல நல்ல மாற்றங்களும் ஏற்றங்களும் வந்துகொண்டிருந்தால், உங்கள் குழந்தைக்கு கஜகேசரி யோகம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது எனப் புரிந்துகொள்ளுங்கள். அறிந்துகொள்ளுங்கள்.

அதாவது சொந்தமாகத் தொழில் செய்ய தயக்கம் காட்டியவராக நீங்கள் இருந்தால், இந்தக் குழந்தையின் பிறப்பிற்கு பிறகு மன தைரியம் கொண்டு, சொந்தமாகத் தொழில் செய்யும் நம்பிக்கையுடன் துணிச்சலுடன் இறங்குவீர்கள்.

இந்த ஜாதகருக்கும் கல்வியிலோ ஆரோக்கியத்திலோ ஏதும் பிரச்சினை வந்தாலும் அதிலுள்ள தடைகளையும் பாதிப்புகளையும் எளிதாகக் கடந்து வெற்றி பெறுவார் என்பது உறுதி. காரணம்... கஜகேசரி யோகம் செய்யும் ஜாலம்!

பொதுவாக தன் வாழ்நாளில் சந்திக்கும் எந்த பிரச்சினையும் இவரை பாதிக்காது. இன்னும்  சொல்லப்போனால் பிரச்சினை வந்ததும் தெரியாது; போனதும் தெரியாது.

எந்தவொரு விஷயத்தையும் எப்படி அணுக வேண்டும் அதை எப்படி செயல்படுத்த வேண்டும் அதில் எப்படி முழு வெற்றியும் பெறவேண்டும் என்பதெல்லாம் இவர்களுக்கு கைவந்தக் கலை!

சரி இந்த யோகத்தை எப்படி அறிவது?

உங்கள் ஜாதகத்தில் உங்கள் ராசிக்கு அதாவது சந்திரன் நின்ற ராசியை ஒன்று என எண்ண ஆரம்பித்து 4. ம் இடம், 7ம் இடம் , 10ம் இடம்... இவற்றில் ஏதாவதொரு இடத்தில் குருபகவான் இருந்தால் அதுவே கஜகேசரி யோகம்.

1 - 4 - 7 - 10 ஆகிய இடங்கள் கேந்திர ஸ்தானம் எனப்படுகிறது.  உங்களுக்கு புரியும்படியாக இன்னும் எளிமையாகச் சொல்லட்டுமா?

எல்லோருடைய ஜாதகத்திலும்  அருள்பற்று, பொருள் பற்று என இரண்டு விதமான பற்றுகள் (ஆசை) உள்ளன.

அருள்பற்று என்பது 1-5 - 9 ஆகிய ஸ்தானங்கள். 1 - 4-7-10 ஆகிய ஸ்தானங்கள் பொருள் பற்று ஸ்தானங்கள். கூடுதலாக 2 மற்றும் 11 ஆகியவையும் பொருள் பற்று ஸ்தானங்கள்தான்!

ஆனால் 1-4 - 7 - 10 இவையே முழுமையான பலம் பொருந்தியவை. இந்த ஸ்தானங்கள் பலமிழந்தால் வாழ்நாள் முழுக்க எவ்வளவு உழைத்தாலும் பெரிய முன்னேற்றம் இருக்காது. ‘அட என்னங்க... எவ்ளோ சம்பாதிச்சாலும் வாய்க்கும் வயித்துக்குமே சரியா இருக்குது’ என்று அலுப்பும்சலிப்புமாக இருக்கும் நிலைதான் இது!

இப்போது எளிமையாக புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 1- 4-7-10 ஆகிய இடங்களில் குரு இருந்தால் அதுவே கஜகேசரி யோகம் என்று.

 குருபகவானின் துணை சந்திரனுக்கு அதாவது ராசிக்கு பக்கபலமாக இருக்கும்போது, அருளோடு பொருளாதர பலமும் வலுப்படும். வாழ்நாள் முழுக்க எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்வை வாழலாம்.

இந்த யோகம் ஒரு வகையில் இடிதாங்கியைப் போலத்தான். எவ்வளவு பெரிய இடி விழுந்தாலும் இடிதாங்கியானது மிகச் சாதாரணமாக அந்த இடியை தன்னுள் வாங்கி மண்ணுக்குள் சத்திமில்லாமல் செலுத்துவது போல், எவ்வளவு பெரிய சங்கடங்கள், துக்கங்கள் , வீழ்ச்சிகள் வந்தாலும் சட்டையில் விழுந்த தூசியை  விரலால் ஸ்டைலாகச் சுண்டி விடுவது போல், just like that என்று தோள் குலுக்கிச் சொல்லிவிட்டு நகருவது போல் அடுத்த வேலையைப் பார்க்க போய் விடுவார்கள்.

ஆமாம். அடுத்த பிரச்சினையை தேடிப்போவார்கள். ஏன் அடுத்த பிரச்சினையை தேடிப் போக வேண்டும் என்றுதானே கேட்கிறீர்கள்?

பிரச்சினைகள் இண்டுஇடுக்கில் இருந்தாலும், கதவைச் சார்த்திக் கொண்டு இருந்தாலும், இவர்கள் இண்டு இடுக்கையும் விடாமல் பிரச்சினைகளைத் தேடித்தேடிச் சென்று அடித்துத் துரத்தும் குணம் கஜகேசரி யோககாரர்களுக்கு உண்டு. பிரச்சினைகள் குடிகொண்டிருக்கும் வீட்டின் காலிங்பெல்லை அழுத்தி, அந்தப் பிரச்சினைக்கே பிரச்சினையை உண்டு பண்ணி, தீர்த்துக் கட்டுகிற வேகம் கொண்டவர்கள். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே பிறந்தவர்கள்!

சளைக்காமல் போராடுபவர்கள் கஜகேசரி யோகக்காரர்கள். பிறகு எப்படி பேசாமல் அமைதியாக இருப்பார்கள்?

கஜகேசரி யோகத்தின் இன்னும் பல விபரங்களையும் இன்னும் இன்னுமான பலன்களையும்  விரிவாகவே பார்ப்போம்.

-தெளிவோம்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close