திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் 22 நாட்களில் ரூ.1.04 கோடி காணிக்கை வசூல்


உண்டியல் வசூல்

திருத்தணி: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியலில், 22 நாட்களில் ரூ.1 கோடியே 04 லட்சத்து ஆயிரத்து 973 ரொக்கத்தை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் திருத்தணி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து, முருகப்பெருமானை வணங்கிச் செல்கின்றனர்.

தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் அதிகளவிலான பக்தர்கள் திருத்தணி முருகன் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்தநிலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளால் நிரம்பிய உண்டியல்களை எண்ணும் பணி, நேற்று (வியாழன்) காலை முதல் மாலை வரை நடைபெற்றது.

இந்துசமய அறநிலையத்துறையின் தலைமையிடத்து உதவி ஆணையர் கண்ணதாசன், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் இணை ஆணையர் ரமணி மற்றும் அறங்காவலர்கள் முன்னிலையில் நடந்த இப்பணியில், தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணியின் முடிவில், 22 நாட்களில் ரூ. 1 கோடியே 04 லட்சத்து 01,973 ரொக்கம் மற்றும் 382 கிராம் தங்கம், 6,715 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தி இருப்பதாக திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.