[X] Close

மங்காத செல்வங்கள் தரும் மயிலாப்பூர்!


mylapore-kabaleeswarar

  • வி.ராம்ஜி
  • Posted: 31 Mar, 2018 08:40 am
  • அ+ அ-

மயிலையின் பெருமையை சொல்லி மாளாது. அதனால்தான் மயிலையே கயிலை; கயிலையே மயிலை என்று சொல்லிப் புகழ்கின்றனர் பக்தர்கள்.   

வாயிலார் நாயனார், பேயாழ்வார், தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஆகியோர் அவதரித்த திருத்தலம் மயிலாப்பூர். ஸ்ரீபார்வதிதேவி முதலான தெய்வங்கள் சிவனாரை பூஜித்து அருள்பெற்ற புண்ணிய பூமி இது.  மகாவிஷ்ணு, வேதங்களைக் காத்தருளிய திருத்தலம் இது.

  நாகை மாவட்டத்தில் உள்ள சிக்கல் திருத்தலத்தில், அன்னை உமையவளிடம் வேல் வாங்கி சூரசம்ஹாரம் செய்தார் முருகப்பெருமான் என்கிறது புராணம். அதேபோல், திருமயிலைக்கு வந்த மயில்வாகனன், இங்கேயும் வேல் பெற்றதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். அங்கே வாங்கியது சக்திவேல். இங்கே கிடைத்தது சிங்காரவேல். எனவே இந்தத் தலத்து முருகனுக்கு ஸ்ரீசிங்காரவேலவர் என்று திருநாமம். 

   ராவணன் முதலான அசுரர்கள் பலரைக் கொன்றதால் ஸ்ரீராமர் பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளானார். இதனால் பல தலங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்த ஸ்ரீராமர், இங்கே மயிலைக்கும் வந்தார். சிவபூஜைகள் செய்தார்.

   தேவர் பெருமக்கள், மயிலையின் பெருமையை அறிந்து, இங்கு வந்து சிவலிங்கத் திருமேனியை வில்வத்தால் அர்ச்சித்து நித்திய பூஜைகளைச் செய்தார்கள்.

 ஸ்ரீபிரம்மாவுக்கு கர்வம் தலை தூக்கியது. அதுவு எப்படி? சிவனாருக்கும் ஐந்து தலை. எனக்கும் ஐந்து தலை என்று தன் ஐந்து தலைகளிலும் கர்வம் கொப்பளிக்க, அகங்காரத்துடன் பேசினார். இதனால் கோபம் அடைந்த சிவபெருமான், ஒரேயொரு தலையைக் கிள்ளியெறிந்தார். பிரம்மாவின் தலையில் ஒன்று கீழே விழுந்தது. அந்தத் தலையை, அதாவது கபாலத்தை தன் திருக்கரத்தில் ஏந்தியபடி காட்சி தந்தார் சிவனார்.

  இதனால் படைப்பாற்றல் முதலான தேஜஸை இழந்து தவித்தார் ஸ்ரீபிரம்மா. தவறை உணர்ந்தார். திருமயிலைக்கு வந்தார். கர்வம் ஒழிந்தது என்று சொல்லி, சிவனாரை நோக்கி கடும் தவம் புரிந்தார். இதில் மகிழ்ந்த சிவனார், பிரம்மாவுக்கு படைப்பாற்றலையும் தேஜஸையும் வழங்கி அருளினார். பிறகு பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீகபாலீஸ்வரர் எனும் திருநாமத்துடன், இங்கேயே, இந்தத் தலத்திலேயே கோயில் கொண்டார் என்கிறது ஸ்தல புராணம்!

எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் மயிலைக்கு வாருங்கள். கபாலீஸ்வரரையும் கற்பகாம்பாளையும் மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். மங்காத செல்வங்களைப் பெறுவீர்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close