[X] Close

2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - ரிஷபம்


2019-rishabam

  • kamadenu
  • Posted: 27 Dec, 2018 12:04 pm
  • அ+ அ-

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

உழைப்பால் சாதிப்பவர்களே! உங்கள் ராசிக்கு 6- ம் வீட்டில்  இந்த ஆண்டு  பிறப்பதால்   எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும்.  கறாராகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். கணவன் மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு.

பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். செவ்வாய் லாப வீட்டில் நிற்கும் நேரத்தில் இந்த 2019-ம் ஆண்டு பிறப்பதால் உங்களைத் தலைநிமிர வைக்கும். வருமானம் உயரும். பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். கம்பீரமாகப் பேசி, காரியம் சாதிப்பீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும்.

1.1.2019 முதல் 12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 9-ல் கேது நிற்பதால் தந்தைக்கு மருத்துவச் செலவுகளும், அவருடன் வீண் விவாதங்களும் வந்து போகும். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும். உங்களை அறியாமல் தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். ஆனால், 3-ம் வீட்டில் ராகு இருப்பதால் துணிச்சல் பிறக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும். திட்டவட்டமாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள்.

இளைய சகோதரர் வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். 13.02.2019ம் தேதி முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 2-ல் ராகுவும் 8-ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் கடுமை காட்டாதீர்கள்.

நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூடச் சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். வாகனத்தை இயக்கும் முன்னர் ப்ரேக் வேலை செய்கிறதா எனப் பார்த்துக்கொள்ளுங்கள். சிறுசிறு விபத்துகளும் வந்துபோகும். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்ப்பதால் உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அழகு, அறிவு கூடும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாட்டு வாய்ப்பு வரும். பழுதா்ன வாகனத்தை மாற்றுவீர்கள்.

ஆனால், 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்கிரமாவதாலும்  28.10.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் குரு மறைவதாலும் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். இந்தாண்டு முழுக்க சனி 8-ல் நின்று அஷ்டமத்துச் சனியாக வருவதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள்.

ஏமாற்றிய நபர்களை நினைத்தும் ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களை நம்பிப் பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்துடன் வெளியூருக்குச் செல்லும் முன் சமையலறையில் கேஸ் இணைப்பைச் சரி பார்த்துச் செல்லுங்கள். களவு போக வாய்ப்பிருக்கிறது.

வியாபாரிகளே! கணிசமாக லாபம் உயரும். அதிக வட்டிக்குக் கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டாம். விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் என்பார்களே, அதுபோல இருக்கிற வியாபாரத்தை ஓரளவு பெருக்கப் பாருங்கள். உங்களுக்கு எதிராக புதிது புதிதாகப் போட்டியாளர்கள் வருவார்கள். முடிந்த வரை கடன் தருவதைத் தவிர்க்கப் பாருங்கள். கடையை மாற்ற வேண்டிய சூழல் வரும்.

உத்தியோகஸ்தர்களே! அஷ்டமத்துச் சனி தொடர்வதால் நாளுக்கு நாள் வேலைச்சுமை கூடிக்கொண்டே போகும். மூத்த அதிகாரிகளைத் திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு  தக்க சமயத்தில் கிடைக்காது. வழக்கு, விசாரணைகளையும் எதிர்கொள்ளலாம். சிலருக்கு மெமோ கொடுப்பார்கள். இத்தனை வருட காலமாக உழைத்து, எல்லாம் கூடி, கனிந்து வரும் நேரத்தில் இப்படி ஆகிறதே என்று ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். இழந்த சலுகைகளைப் போராடி பெறுவீர்கள்.

இந்தப் புத்தாண்டு  வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் கொஞ்சம் நெளிவு சுழிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதாக அமையும்.

சென்னை, தாம்பரம் சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து 12கி.மீ தொலைவில் உள்ள அனுமந்தபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீவீரபத்திர சுவாமிகளை வெற்றிலைமாலை அணிவித்து வணங்குங்கள், நினைத்தது நிறைவேறும்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close