[X] Close

சிவபக்திக்கு பூம்பாவைச் சிறுமி!  மயிலை மண்ணின் பெருமை!


poompavai-myalai

  • வி.ராம்ஜி
  • Posted: 29 Mar, 2018 11:15 am
  • அ+ அ-

சென்னை என்றாலே மயிலாப்பூர் நினைவுக்கு வரும். மயிலை என்றாலே அன்பும் கருணையும் கொண்ட கற்பகாம்பாளும் ஞானமும் முக்தியும் தருகிற கபாலீஸ்வரரும் நினைவுக்கு வருவார்கள். அத்துடன்... பூம்பாவை எனும் சிறுமியும் நினைவுக்கு வந்து நிற்பாள்.

யாரிந்த  பூம்பாவை?

சிவநேசச் செட்டியார் என்பவர், பெயருக்கேற்றார் போலவே சிவபக்தர். மிகப்பெரிய வணிகர். இவரின் ஏழு வயது மகள் பூம்பாவை, ஒருநாள் பூப்பறிக்கச் சென்ற போது பூநாகம் கடித்தது. அப்படியே சுருண்டு விழுந்து இறந்தாள்.

விஷயம் அறிந்து ஓடிவந்த சிவநேசர், கதறினார். கண்ணீர் விட்டு அழுதார். நெஞ்சில் அடித்துக் கொண்டு குமுறினார். தலையில் கைவைத்துக் கொண்டு செய்வதறியாது விக்கித்துப் போனார். குழந்தையை தகனம் செய்து, அந்த சாம்பலையும் எலும்பையும் ஒரு பானையில் வைத்து, கன்னிமாடத்தில் வைத்திருந்தார்.

  அதேநேரம், திருஞான சம்பந்தர் திருவெற்றியூருக்கு வந்திருந்தார். அவரைத் தரிசிப்பதும் ஆசி பெறுவதும் ஓரளவு நிம்மதி தரும் என்று நினைத்த சிவநேசர், ஓடோடிச் சென்றார். அவரைப் பார்த்ததும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தார். அப்படியே மகளைப் பறிகொடுத்த நிலையை, பரிதாபச் சம்பவத்தை எடுத்துரைத்தார்.

 அதைக் கேட்டு ஒருகணம் யோசித்தவராக திருஞானசம்பந்தர், திருமயிலைக்கு அவருடன் வந்தார். ஸ்ரீகபாலீஸ்வரர் சந்நிதிக்கு வந்து வணங்கினார். பூம்பாவையின் எலும்புகள் நிறைந்த அஸ்தியை எடுத்துவரச் சொன்னார். ‘மட்டிட்ட புன்னையங் கானல்...’ எனும் பதிகத்தை மனமுருகப் பாடினார். பாடி முடித்ததும், பூம்பாவை அங்கே உயிர் பெற்று நின்றாள். அனைவரும் அதிர்ந்தார்கள். வியந்தார்கள்.

 நெக்குருகிப் போன சிவநேசர், ‘என் மகளை தங்களுக்கே மணம் முடிக்கத் தர விரும்புகிறேன்’ என்று வேண்டினார். ஆனால் ஞானசம்பந்தர் மறுத்துவிட்டார். அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

  அதையடுத்து பூம்பாவை, சிவத்தொண்டில் தன் வாழ்நாளை ஒப்படைத்தாள். ஒருகட்டத்தில், சிவபதம் அடைந்தாள் என்கிறது திருமயிலை ஸ்தல புராணம்!

பூம்பாவை எனும் சிறுமி, சிவபக்தியால் மீண்டும் உயிர்த்தெழுந்து, சிவபக்தியுடன் வாழ்ந்தாள். அவள் உயிர் பெற்ற நன்னாள் இன்றைய தினம். இத்தனை சிறப்புகளும் பெருமைகளும் சிவனருளும் ஒருங்கே கொண்ட மயிலை திருத்தலத்தில், சீரோடும் சிறப்போடும் இன்று வெகு விமரிசையாக நடைபெறுகிறது அறுபத்து மூவர் திருவீதியுலா.

கயிலையே மயிலை; மயிலையே கயிலை. அறுபத்து மூவரே போற்றி போற்றி!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close