[X] Close

சக்தியும் முக்தியும் தரும் அறுபத்து மூவர் விழா! வாங்களேன்... மயிலாப்பூருக்கு!


arupathu-moovar

  • வி.ராம்ஜி
  • Posted: 29 Mar, 2018 10:52 am
  • அ+ அ-

சென்னை மயிலாப்பூரே விழாக் கோலத்தில் மிதக்கிறது. இன்று 29.3.18 அறுபத்து மூவர் விழா. பக்தர்களின் வெள்ளத்திற்கு நடுவே, அறுபத்து மூவர் வீதியுலா வரும் சப்பரங்கள், அசைந்து அசைந்து, ஆடியாடி வரும் அழகைக் காண கண் கோடி வேண்டும்.

மயிலாப்பூருக்கு வந்து இன்று கால் வைத்தாலே மகா புண்ணியம் என்கிறது ஸ்தல புராணம். அற்புதமான இந்த நன்னாளில், சென்னை மயிலாப்பூர் எனும் தலத்தின் பெருமைகளில் ஒன்றான ஏழு பற்றிப் பார்ப்போம். பரவசமாவோம்.

 பொதுவாகவே, ஏழு என்ற எண்ணுக்கும் இந்து மதத்துக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. ஏழு ஜென்மம் என்பார்கள். ஏழு புண்ணிய நதிகள் என்கிறது புராணம். ஏழு ஸ்வரங்கள் என்று இசையைக் கொண்டாடுகிறோம். சப்த முனிவர்களுக்கு புராணத்தில் முக்கியத்துவம்  கொடுக்கப்பட்டிருக்கிறது.  

  தஞ்சைக்கு அருகில் சப்த ஸ்தான ஸ்தலங்கள் என்று உள்ளன. அதேபோல் சப்த மங்கை திருத்தலங்கள் என்று அமைந்திருக்கின்றன. திருவாரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள தியாகாராஜர் குடிகொண்டிருக்கும் தலங்களை, சப்த விடங்க தலங்கள் என்று போற்றுவார்கள்.

 அதேபோல், ஏழுக்கும் மயிலாப்பூர் தலத்துக்கும் தொடர்புகள் பல உண்டு. ஸ்ரீகபாலீஸ்வரர், ஸ்ரீவெள்ளீஸ்வரர், ஸ்ரீகாரணீஸ்வரர், ஸ்ரீமல்லீஸ்வரர், ஸ்ரீவிருபாட்சீஸ்வரர், ஸ்ரீவாலீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் ஆகிய சிவாலயங்கள் இங்கே அமைந்துள்ளன. இந்த ஏழு சிவன் கோயில்களும் அருகருகே உள்ளன. இந்தக் கோயில்களை முறையே ஒரேநாளில் தரிசிக்கலாம். அப்படித் தரிசித்தால், சகல வினைகளும் தீரும். முக்தி பெறலாம் என்பது ஐதீகம்! இத்தனைப் பெருமைக்கு உரிய தலம் என்பதால்தான், கயிலையே மயிலை, மயிலையே கயிலை எனும் பெருமை பெற்றது இந்தத் திருத்தலம். அதாவது திருக்கயிலாயத்துக்கு இணையானது மயிலாப்பூர் தலம்!

  அதேபோல் மயிலாப்பூரில் ஏழு பெருமாள் கோயில்கள் உள்ளன. மயிலாப்பூர் கோயிலுக்கு அருகில் உள்ள திருக்குளம் உட்பட ஏழு திருக்குளங்களும் உள்ளன. கபாலி தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், கடல் தீர்த்தம் (கடவுள் தீர்த்தம் என்பார்கள்), ராம தீர்த்தம் என ஏழு தீர்த்தங்களைக் கொண்டது மயிலாப்பூர்.

இத்தனை பெருமைகள் கொண்ட திருமயிலை எனப்படும் மயிலாப்பூர் கோயிலில், பங்குனி உத்திர விழாவின் முத்தாய்ப்பான விழாவான, அறுபத்து மூவர் திருவிதியுலா வைபவம் இன்று மாலை (29.3.18) நடைபெறுகிறது.

மயிலாப்பூரே மக்களால் நிரம்பியிருக்கும் நாள் இன்று. எங்கு பார்த்தாலும் அன்னதானம் அமர்க்களப்படும். நீரும் நீர்மோரும் பானகமும் வழங்கிக் கொண்டே இருப்பார்கள். ‘கயிலையே மயிலை; மயிலையே கயிலை’ எனும் கோஷங்கள் கேட்டுக் கொண்டே இருக்கும்.

கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரரையும் அறுபத்து மூவரையும் குரு வார நன்னாளில், பிரதோஷம் எனும் அற்புத நாளில், அறுபத்து மூவர் விழாவில் தரிசிப்போம். நினைத்த காரியத்தின் தடைகளையெல்லாம் தகர்த்து, காரியம் யாவிலும் துணை நின்று அருளுவார் கபாலீஸ்வரர் பெருமான்.

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close