[X] Close

வாழ்வை உணர்த்திய மகாவீரர்


mahaveer-jayanthi

  • kamadenu
  • Posted: 28 Mar, 2018 09:27 am
  • அ+ அ-

அகிம்சை அறத்தைத் தாரக மந்திரமாக ஏற்று,சமண நெறிகளை உலகு வாழ்வாங்கு வாழ உபதேசித்த வர்த்தமான மகாவீரர்,பாவாபுரி எனும் கிராமத்திற்கு  நாற்பத்திரண்டாவது மழைக்காலத் தங்கலுக்காக எழுந்தருளினார். அதனை அறிந்த ஹஸ்திபாலன் எனும் அரசன் மகாவீரரிடம் அருளாசி பெற வந்து வணங்கினான். 

அவணி அரசன், ஆன்மிக அரசனிடம் நிர்வாணம் பற்றி விளக்க வேண்டினான்.  பகவானும் மிக அருமையான விளக்கவுரை ஆற்றினார்.தன் முதன்மைச் சீடரான மாமுனிவர் கௌதம கணதரரை சோமசர்மா என்பவரிடம் சென்று நிர்வாண அற மொழிகளை விளக்கிவிட்டு வருமாறு பணித்தார்.

 மழைக்காலத் தங்கல் முடியும் தருவாயில்,அவர் தனது வாழ்வின் முடிவுக் காலம் நெருங்குவதை உணர்ந்தார். அதனை அனைவரிடமும் அறிவித்தார். அச்செய்தியைக் கேட்ட மக்கள் பெரும் பதட்டமும் வருத்தமும் அடைந்தனர்.

 

வானமே இடிந்து வீழ்வது போல கவலைக் கொண்டனர். பல்வேறு பிறவிகளை எடுத்த மகாவீரர், பிறவிப் பிணி அறுத்து பரிநிர்வாணம் அடைய போகின்றார் என்பது மகிழ்ச்சியானது என்றாலும் அவரைப் பிரிந்தும் அவரின் தெய்வீக வார்த்தைகளைக் கேளாமலும் எப்படி இருக்க முடியும் என்று வருந்தி சோகத்தில் மூழ்கினர்.

 

இச்செய்தியை அறிந்த தேவேந்திரன் நிலை தடுமாறினான். மகாவீரிடம் வந்தான். ”இறைவனே,தாங்கள் அவதரித்ததும்,துறவு ஏற்றதும், முழுதுணர் அறிவு பெற்றதும் இவ்வுலக உயிர்களுக்காக அல்லவா? இவ்பூவுலகைவிட்டு நீங்கி பரிநிர்வாணம் அடையும் தங்களின் முடிவை தள்ளிப் போடக் கூடாதா”என்று கவலையுடன் வேண்டினான்.

”தேவேந்திரா, உனக்கு என் மீதுள்ள அன்பு உன் கண்களை மறைக்கின்றது. யாராக இருந்தாலும் ஒரு கண நேரம் கூட வாழ்வைத் தள்ளிப் போடமுடியாது அல்லவா? 

நான் எதற்காக மனிதனாக அவதரித்தேனோ அது நிறைவேறிவிட்டது.இனி நான் ஒரு கண நேரம் தாமதித்தாலும் அது எனக்கு பெரும் சுமையாக அமைந்து விடும்”என்று உறுதியாக தெளிவு படுத்தினார்.

 வர்த்தமான மகாவீரர், உயிர்கள் பிறவி சுழற்சியில் சிக்கி இன்னல் அடையாமல், பிறவா இன்ப நிலை பெற, பிறவிப் பெரும் கடலை நீந்தி இறைனாக உயர, அகிம்சை, வினைப்பயன்கள் போன்றவை பற்றி தனது மாபெரும் நீண்ட கடைசி தெய்வீக உரையை ஆற்ற ஆரம்பித்தார்.

மக்கள் அனைவரும் பகவானின் அறமழையில் மெய்ம்மறந்து நனைந்தார்கள். மகாவீரர் இரண்டு நாட்களாக தண்ணீர்கூட அருந்தாமல் உண்ணா விரதத்தில் இருந்தார். தன் புனித உரையை முடித்தவர் பின்பு பத்மாசனத்தில் அமர்ந்தவாறு மௌனத்தில் ஆழ்ந்தார்.

 கி.மு 527ல் கார்த்திகை மாத அமாவாசை இரவு. நேரம்12.30ல் இருந்து காலை 2.30 அளவில் உடல் அசையாது நிமிர்ந்திருந்தார். மகாவீரரின் முகத்தில் மிகுந்த ஒளி தோன்றி பிரகாசித்தது. அவரைச் சுற்றி உன்னத ஒளிவட்டம் சூழ்ந்தது. மகாவீரர் தனது கம்பீர உடலை விட்டு பரிநிர்வாணம் எனும் தூய இறைநிலையை அடைந்தார்.

 முக்தி பெற்ற மகாவீரருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் மன்னர்களும் மக்களும் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர். இதுவே முதல் தீபாவளியும் ஆனது.

மகாவீரர் ஜயந்தித் திருநாளில் (29.3.18 வியாழன்) அவரை வணங்குவோம். குரு வார நன்னாளில், ஞானகுரு மகாவீரரை பிரார்த்திப்போம். இந்த உலகம் உய்யட்டும். உலகெல்லாம் அன்புமழை பொழியட்டும்!
- விஜி சக்கரவர்த்தி

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close