சூலக்கல் மாரியம்மன் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


சூலக்கல் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே 400 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோயில் மூன்று நாள் தேரோட்டம் விழா இன்று (மே 30) தொடங்கியது. 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

பொள்ளாச்சி அடுத்த சூலக்கல் மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த, 13-ம் தேதி திருத்தேர் முகூர்த்தக்கால் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பூச்சாட்டு விழா, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி மற்றும் கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. கோயிலில், தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதுடன், காலை மற்றும் இரவு நேரங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. 28-ம் தேதி வரை தினமும் காலை, 9 மணி மற்றும் இரவு 8 மணிக்கு அம்மன் திருவீதி உலா, இரவு 9 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நேற்று காலை 6 மணிக்கு மாவிளக்கு, பொங்கல் வழிபாடும், இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் தேர்த்திருவிழா இன்று மாலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதற்காக 36 அடி உயரம் உள்ள அம்மன் தேரும், 15 அடி உயரம் உள்ள, விநாயகர் தேரும் தயார் படுத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இன்று மாலை 4.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.

புரவிப்பாளையம் ஜமீன் குடும்பத்தை சேர்ந்த, சண்முக சுந்தரி வெற்றிவேல் கோப்பண்ண மன்றாடியார், கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) சீனிவாச சம்பத் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் விழாவுக்குழுவினர் செய்திருந்தனர். நாளை (31-ம் தேதி) மாலை 4.30 மணிக்கு இரண்டாம் நாள் தேரோட்டமும், நாளை மறுநாள் (ஜூன் 1-ம் தேதி) மாலை மூன்றாம் நாள் தேரோட்டமும் நடைபெறுகிறது. ஜூன் 2-ம் தேதி மதியம் மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.

இது குறித்து சூலக்கல் பகுதி பொதுமக்கள் கூறும்போது,”கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோயில் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது. இந்த திருவிழா 18 கிராமங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த கோயிலுக்கு கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். ஆண்டுதோறும் மே மாதம் இறுதி வாரத்தில் தேர்த்திருவிழா நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 3 நாட்கள் தொடர்ந்து நடக்கும். இழுப்பை மற்றும் தேக்கு மரத்தில் 32 டன் எடையில், 36 அடி உயரத்தில், 300 க்கும் மேற்பட்ட சிற்ப வேலைப்பாடுகளுடன் இந்த தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும் என்றனர்.