பெருமாள் சுவாமிகள் நவநீத சேவை: வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் வீதியுலா 


தஞ்சாவூரில் இன்று 16 பெருமாள் கோயில்களிலின் உற்சவர்கள், வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் இன்று நவநீத சேவையில் வீதியுலா வந்தனர். இந்த பெருமாள் சுவாமிகளை  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.| படம்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இன்று (வியாழக்கிழமை) 16 பெருமாள் கோயில்களின் உற்சவர்கள், வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் நவநீத சேவையில் வீதியுலா வந்தனர். அப்போது பெருமாள் சுவாமிகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபா ஆகியவை சார்பில் 90-வது ஆண்டாக கருட சேவை விழா கடந்த 28-ம் தேதி, தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நரசிம்மப் பெருமாள் சன்னிதியில் திவ்யதேச பெருமாள்களுக்குத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு வெண்ணாற்றங்கரையிலிருந்து திவ்யதேச பெருமாளுடன் 25 பெருமாள் கோயில்களின் உற்சவர்கள் கருட வாகனத்தில் புறப்பட்டு, கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய ராஜ வீதிகளில் வீதியுலா நடைபெற்றது.

தொடர்ந்து இன்று நீலமேகப் பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்றப் பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், கரந்தை யாதவ கண்ணன் கோயில், கீழராஜ வீதி வரதராஜ பெருமாள் உள்பட 16 கோயில்களின் உற்சவமூர்த்திகள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் நவநீத சேவையில் வீதியுலா வந்தனர்.

தஞ்சாவூரின் நான்கு ராஜவீதிகளிலும் நடைபெற்ற இந்த உற்சவத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, நாளை (மே 31) கருட சேவை புறப்பாடு நடைபெற்ற கோயில்களின் பெருமாள் சுவாமிகளுக்கு, காலை 9 மணியளவில் விடையாற்றி உற்சவம் நடைபெறவுள்ளது.