திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்களின் பொருட்களை பரிசோதிக்க ரூ.14 லட்சத்தில் ‘ஸ்கேனர்’ இயந்திரம் 


மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களின் பொருட்களை பரிசோதிக்கும் வகையில் ரூ.14 லட்சத்தில் புதிய ஸ்கேனர் இயந்திரம் நிறுவப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதித்து போலீஸார் அனுமதிக்கின்றனர்.

தற்போது பக்தர்கள் கொண்டு வரும் பைகளிலுள்ள பொருட்களை பரிசோதிக்கும் வகையில் ரூ. 14 லட்சத்தில் புதிய ‘ஸ்கேனர்’ இயந்திரம் கோயில் நுழைவாயில் அருகில் ஆஸ்தான மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் இன்று முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

அதனை திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் குருசாமி தொடங்கி வைத்தார். கோயில் அலுவலக கண்காணிப்பாளர் ரஞ்சனி, உள்துறை கண்காணிப்பாளர்கள் சத்தியசீலன், சுமதி ஆகியோர் உடனிருந்தனர். இதில் சுழற்சி அடிப்படையில் காலை மாலையில் தலா 2 போலீஸார் கூடுதலாக நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுகின்றனர்.