[X] Close

ஸ்ரீராமஜெயம் எழுதுங்கள்; இனியெல்லாம் ஜெயமே..!  


rama-navami

  • வி.ராம்ஜி
  • Posted: 24 Mar, 2018 10:33 am
  • அ+ அ-

இன்றைக்காவது அதாவது ராமநவமி நாளிலாவது ஸ்ரீராமஜெயம் எழுதுங்கள். ராமாயணம் படியுங்கள். ராமகாதையைக் கேளுங்கள். சுந்தரகாண்டம் வாசித்தாலே, நம் வாழ்க்கையே மலர்ந்து மணம் பரப்பும் என்பது ஐதீகம். நாளைய தினம் 25.3.18 ஞாயிற்றுக்கிழமை, ராம நவமி நன்னாள்!

முன்பெல்லாம், ஸ்ரீராமஜெயம் எழுதும் பக்தர்கள் அதிகம் இருந்தார்கள். தினமும் 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதுகிற பக்தர்கள் இருந்தார்கள். அதேபோல், ஒரு நோட்டுப் புத்தகத்தில், ஸ்ரீராமஜெயம்  எழுதிக் கொண்டே வருவார்கள். காஞ்சி மகாபெரியவாவை தரிசித்து, அவரிடம் ஸ்ரீராமஜெயம் எழுதிய நோட்டுகளைக் காட்டி, ஆசி வாங்கிச் செல்வார்கள். சிலசமயம், அவர்களின் ஊருக்கே விஜயம் செய்திருப்பார் காஞ்சி மகான். அப்போது சென்று நோட்டுப் புத்தகங்களை சமர்ப்பித்து, நமஸ்கரிப்பார்கள். மகாபெரியவாளும் அவர்களையும் அந்தக் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்.

சமீபகாலங்களில், ஸ்ரீராமஜெயம் எழுதுவது குறைந்துவிட்டதாக வருந்துகின்றனர் பெரியவர்கள். ‘ஸ்ரீராமஜெயம்” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே, எழுத எழுத, நல்லதொரு அதிர்வலைகள் இல்லத்திலும் உள்ளத்திலும் பரவி, நம்மை நல்வழிப்படுத்தும்; நல்லவர்களாக்கும்; நற்சிந்தனைகளுடன் இயங்கச் செய்யும்; நல்லநல்ல சத்விஷயங்களையெல்லாம் செய்ய துணைநிற்கும். நாளைய சந்ததியையும் பலமுடனும் உரமுடனும் திடமுடனும் வளமுடனும் வாழச் செய்யும் என்கிறார்கள் ஆச்சார்யப்பெருமக்கள்.

சின்னச் சின்ன சிக்கல்களோ கருத்துவேற்றுமைகளோ இருப்பது சகஜம்தான். குழப்பங்களும் தவிப்புகளும் குடித்தனம் பண்ணும் என்பது உண்மைதான். திடீரென்று காசுபணம், பதவி, கெளரவம், உத்தியோகம் என்பதான விஷயங்களையும் இழந்து, தவிப்பவர்கள் அதிகம்தான்.

மனிதனாக அவதரித்து, மனிதன் எப்படியெல்லாம் வாழவேண்டும் என  உலகுக்கு எடுத்துரைத்த அவதார புருஷன் ஸ்ரீராமரின்  திருநாமத்தை, ‘ராம் ராம் ராம்...’ என்று சொல்லிக் கொண்டே இருங்கள். முடிந்த போதெல்லாம் சொல்லுங்கள்.

முக்கியமாக, நாளைய தினம், 25.3.18 ஞாயிற்றுக்கிழமை நாளில், ராமநவமி நன்னாளில், ஒரு பேப்பரை எடுத்துக் கொண்டு, பூஜையறையில் விளக்கேற்றி, அமர்ந்து ‘ஸ்ரீராமஜெயம்’ எழுதுங்கள். 108 முறை எழுதுங்கள். 108 முறையேனும் எழுதுங்கள். ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திர நாளில், எழுதுங்கள். மாதந்தோறும் வருகிற நவமி திதியில் எழுதுங்கள். எதுவுமே முடியாது. எனக்கு நேரமே இல்லை. நான் ரொம்ப பிஸி என்கிறீர்களா? ராமநவமி நாளில் மட்டுமாவது ஸ்ரீராமஜெயம் எழுதுங்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சின்னச் சின்ன உரசல்களும் சண்டைகளும் பூசல்களும் புகைச்சல்களும் காணாதுபோகும். கருத்தொருமித்த தம்பதியாக, வாழ்ந்து இல்லத்தை மேம்படுத்துவீர்கள். இழந்த செல்வம், இழந்த வீடுமனை, இழந்த உத்தியோகம், இழந்த பதவி எல்லாவற்றுக்கும் மேலாக, இழந்த நிம்மதியையும் இழந்த சந்தோஷத்தையும் தந்தருள்வார் ஸ்ரீராமபிரான். ஸ்ரீராமஜெயம் எழுதுங்கள். இனியெல்லாம் ஜெயமே என்பது உறுதி.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close