விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. கூவாகத்தில் கடந்த ஏப். 29-ம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான அரவான் சுவாமி (கூத்தாண்டவர்) திருக்கண் திறத்தல் மற்றும் திருநங்கைகள் மாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள், அரவானை கணவராக ஏற்று மங்கல நாண் தரித்தனர். திருமணம் உள்ளிட்ட நேர்த்திக் கடனுக்காக ஆண்கள் உள்ளிட்ட பக்தர்களும், கோயில் பூசாரி கையால் தாலியை கட்டிக் கொண்டனர்.
நேற்று அதிகாலை கோயிலில் உள்ள அரவான் சிரசுக்கு மாலை அணிவித்து, ஊர்வலமாக கோயிலின் வடக்கே நிலை நிறுத்தப்பட்டிருந்த சகடைக்கு எடுத்து வந்தனர். அங்கு 30 அடி உயர கம்பம் நட்டு, வைக்கோல் சுற்றப்பட்டது. பின்னர் 3 கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புஜங்கள், மார்பு பதக்கம், அரசிலை, பாதம், கைகள், கயிறு, கடையாணி உள்ளிட்டவற்றை கொண்டு அரவானின் திருஉருவம் வடிவமைக்கப்பட்டது.
தொடர்ந்து, தேரோட்டம் தொடங்கியது. உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிக்கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பக்தர்களின் வெள்ளத்தில் 4 மாட வீதிகளில் வலம் வந்த திருத்தேர் பின்னர் நிலைக்குத் திரும்பியது. விவசாயிகள் விளை பொருட்கள் மற்றும் தேங்காய்களை சூறையிட்டு வேண்டிக் கொண்டனர். திருநங்கைகளும், பக்தர்களும் அரவான் மீது பூக்களைத் தூவினர். பின்னர், அழிகளம் நோக்கி தேர் புறப்பட்டது. தேரைப் பின்தொடர்ந்து திருநங்கைகள் ஒப்பாரி வைத்துத் கொண்டு ஓடினர்.
நத்தம்கிராமம் பந்தலடி எனப்படும் அழிகளத்துக்கு திருத்தேர் சென்றதும், அரவான் களப்பலி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது திருநங்கைகள் தாலியை அறுத்தும், வளையல்களை உடைத்தும், நெற்றித் திலகத்தை அழித்தும், அங்கிருந்த கிணற்றில் தலைமூழ்கினர். பின்னர் வெள்ளைப் புடவை உடுத்தி விதவைக்கோலம் ஏற்றனர். தங்களது தாலியை கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தினர்.
மேலும் குழுக்களாக இணைந்து ஒப்பாரிவைத்து, அழுது புலம்பியபடி சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். நேற்று இரவு அரவான் உயிர்ப்பிக்கும் நிகழ்வு, ஏரிக்கரை காளி கோயிலில் நடைபெற்றது. பின்னர், பந்தலடிக்கு தேர் கொண்டு வரப்பட்டது. அரவான் சிரசு மட்டும் சிறப்பு அலங்காரத்துடன் நத்தம், தொட்டி, கூவாகம் கிராமங்கள் வழியாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. இன்று விடையாற்றி உற்சவம், நாளை தர்மர் பட்டாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அத்துடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.