சித்திரைத் திருவிழா: மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்த கள்ளழகர்!


கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவில் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார்.

மதுரை கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 6-ம் நாளான நேற்று காலை வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயில் இருந்து திருமஞ்சன மாகி ஏகாந்த சேவையில் சுவாமி அருள்பாலித்தார். தொடர்ந்து, சேஷ வாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனமாகி மாலையில் கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்பனர், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.

மண்டூகமாக (தவளையாக) மாறிய முனிவரை நாரைகள் கொத்தி தின்று விடாமல் கள்ளழகர் காப்பாற்றினார். அதற்கான திருவிளையாடலை தத்ரூபமாக செய்து காட்டினர். வைகை ஆற்றில் சிறுபள்ளம் வெட்டி அதில் தண்ணீரை நிரப்பி, அதன் கரையில் மண்டூக முனிவர் சிலை அமைத்திருந்தனர். அங்கு உயிருடன் நாரைகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. தீபாராதனை செய்து கள்ளழகர் சாபவிமோசனம் அளித்தார். அப்போது கட்டியிருந்த 3 நாரைகளை அவிழ்த்துவிடப்பட்டன. அவை தென் கிழக்கு திசை நோக்கி வைகை ஆற்றில் செல்லும் தண்ணீரை நோக்கி சென்றதால், விவசாயம் செழிக்கும் என்று பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பின்னர், தேனூர் மண்டபத்தை 3 முறை வலம் வந்து கள்ளழகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அங்கிருந்து புறப்பட்டு அனுமார் கோயிலுக்கு சென்ற கள்ளழகருக்கு அங்கப்பிரதட்சணம் நடைபெற்றது. பின்னர் வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளியபடி ராமராயர் மண்டபம் சென்றார். அங்கு விடிய விடிய தசாவதாரம் நடைபெற்றது.

இன்று காலை மோகினி அவதாரத்தில் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். பிற்பகல் திருமஞ்சன மாகி அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் புறப்படுகிறார். தல்லாகுளத்திலுள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு திருமஞ்சனமாகி மறுநாள் அதிகாலை 2.30 மணியளவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்துடன் கருப்பணசாமி கோயில் சந்நிதியில் எழுந்தருள்கிறார். அங்கு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருள்வதை விடிய விடிய காத்திருந்து தரிசனம் செய்வர்.

பின்னர் அங்கிருந்து தல்லாகுளம் பெருமாள் கோயில், அவுட்போஸ்ட் மாரியம்மன் கோயில், அம்பலகாரர் மண்டபம் வழியாக மூன்றுமாவடியில் இரவு 7 மணியளவில் மதுரை மக்களிடம் இருந்து விடைபெற்று, அழகர் மலைக்குப் புறப்படுகிறார்.

x