காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் - கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா!


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்வான கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா வரும் நிகழ்வு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொது மக்கள் சாலைகளில் கூடி நின்று பெருமாளை வழிபட்டனர்.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் மூலம் உலகப் புகழ் பெற்றது வரதராஜ பெருமாள் கோயில். இந்தக் கோயில் 108 வைணவ திவ்யா தேசங்களில் ஒன்று. இந்தக் கோயிலின் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த பிரம்மோற்சவத்தையொட்டி காலை, மாலை இரு வேளையும் பெருமாள் வீதியுலா வரும் நிகழ்வுகள் நடைபெற்றன.

புகழ் பெற்ற கருட சேவை உற்சவம்: இந்த பிரம்மோற்சவத்தில் புகழ் பெற்றது கருட சேவை உற்வசம். இந்த உற்சவத்தை காண காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்கள் காஞ்சிபுரம் வருவர். இந்த கருட சேவை உற்வசவத்தையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

கோயிலில் இருந்து புறப்பட்ட வரதராஜ பெருமாளுக்கு கோயில் ராஜகோபுரத்தில் தொட்டாட்சியாருக்கு காட்சி அளிக்கும் வைபவம் நடைபெற்றது. அப்போது வரதராஜ பெருமாளை சில விநாடிகள் குடை கொண்டு மறைத்தனர். இவ்வாறு மறைக்கும் நேரத்தில் சோளிங்கரில் கருட சேவைக்கு வர முடியாத தொட்டாட்சியர் என்ற பக்தருக்கு அவர் இடத்திலேயே சென்று பெருமாள் காட்சி அளித்ததாக கூறப்படுகிறது. இதனை நினைவுகூரும் வகையில் இந்த சேவை ஆண்டுதோறும் நடைபெறும்.

பின்னர் அங்கிருந்து விளக்கடி கோயில் தெருவில் உள்ள ஸ்ரீதூப்புல் வேதாந்த தேசிகர் சந்திதிக்கு வரதராஜ பெருமாள் அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்காண பொதுமக்கள் கூடி நின்று வழிபட்டனர். அங்கிருந்து பிள்ளையார் பாளையம் வழியாக கச்சபேஸ்வரர் கோயிலை வந்தடைந்தார். அங்கு அவருக்கு குடை மரியாதை வழங்கப் பட்டது. பின்னர் கருட வாகனத்தில் வந்த பெருமாள் சங்கர மடம் அருகே உள்ள வாகன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் செல்லும் வழியெங்கும் பக்தர்கள் கூடி நின்று தீபாராதனை காட்டி வழிபட்டனர். இந்த விழாவையொட்டி காஞ்சிபுரம் மாநகரத்தில் பல்வேறு இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வாகனங்கள் வேறு வழிகளில் திருப்பி விட்டப்பட்டன.

x