நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோயிலில் நாமகிரித் தாயாருக்கு, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ரூ.4 லட்சம் மதிப்புள்ள தங்கத் தாலிக் கொடியைக் காணிக்கையாக வழங்கினார்.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் ஒரே கல்லில் உருவான சாளக் கிராம மலையின் மேல் பகுதியில் மலை வரத ராஜப் பெருமாள் கோயிலும், கிழக்குப் பகுதியில் அரங்க நாயகி தாயார் உடனுறை அரங்கநாதர் குடவறைக் கோயிலும் உள்ளது. இம்மலையின் மேற்குப் பகுதியில் நாமகிரித் தாயார் உடனுறை நரசிம்மர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு எதிரில் ஆஞ்சநேயர் சாந்த சொரூபியாக நின்ற நிலையில், நரசிம்மரின் பாதத்தை வணங்கியவாறு பக்தர்களுக்குச் சேவைச் சாதித்து வருகிறார்.
ஆண்டுதோறும் நரசிம்மர் கோயிலில் நரசிம்மர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களிருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபடுவர். இந்தாண்டு நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நேற்று நடந்தன.
இதனிடையே, சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கட் நரசிம்மன் என்பவர் நாமகிரித் தாயாருக்கு வெள்ளிக் கொடியில் கோர்த்துச் செய்யப்பட்ட தங்கத் தாலியைக் காணிக்கையாக, கோயில் செயல் அலுவலரும், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையருமான இளையராஜாவிடம் வழங்கினார்.
பின்னர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் வெங்ட் நரசிம்மன் குடும்பத்தினருடன் பங்கேற்று வழிபட்டார். காணிக்கையாக வழங்கப்பட்ட தங்கத்தாலியின் எடை 42 கிராம், வெள்ளிக் கொடியின் எடை 85 கிராம். இதன் மதிப்பு ரூ.4 லட்சமாகும்.