காலை 5.45-க்கு எழுந்தருளிய கள்ளழகரை தரிசிக்க அதிகாலை 2 மணிக்கே வைகை ஆற்றில் குவிந்த பக்தர்கள்!


படம்:நா.தங்கரத்தினம்

வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்துக்கு தென்மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் கள்ளழகரைக் காண மதுரையில் திரண்டனர். வைகை ஆற்றின் வடகரையிலும், தென்கரையிலும் ஏவி மேம்பாலம், யானைக்கல் பாலம், கோரிப்பாளையம் பகுதியில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டனர். அதிகாலை 2 மணியிலிருந்து மக்கள் சாரை, சாரையாக வரத் தொடங்கினர்.

* ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் இந்துசமய அறநிலையத்துறை மண்டகப்படியில் பூ அலங்கார வேலைகள், வாழை மரங்கள் கட்டும் பணிகள் என அதிகாலை 4 மணி வரை நடந்தன. மதுரை ஆட்சியர் சங்கீதா தனது குடும்பத்தினருடன் அதிகாலை 3.56 மணிக்கு வைகை ஆற்றுப்பகுதி வந்தார். அவரைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் சித்ரா குடும்பத்துடன் வருகை தந்தார்.

அதிகாலை 4 மணிக்கு, ஓய்வு பெற்ற உதவி ஆணையர் குணசேகரன் திருப்பாவை பாடலுடன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து அழகர்கோவில் கோயில் நிர்வாக அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜும் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் தீபக் ராமச்சந்திரன் அழகர்கோவில் சிறப்புகள் பற்றி பேசினார்.

* அதிகாலை 4.20 மணிக்கு வாராரு வாராரு அழகர் வாராரு என்ற திரைபடப் பாடல் ஒலிபரப்பானது. அப்போது வைகை கரைப்பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கண்விழித்து கள்ளழகரை தரிசனம் செய்யத் தயாராகினர்.

* கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளத் தயாராக இருந்தபோது சீர்பாத தாங்கிகளும், போலீஸாரும் சம எண்ணிக்கையில் இருந்ததால் அறநிலையத் துறை மண்டகப்படிக்குள் செல்வதில் நெரிசல் ஏற்பட்டது.

* கள்ளழகர் மண்டகப்படிக்குள் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். லாலா ஸ்ரீரெங்க சத்திரம் மண்டகப்படிக்குள் சென்று மாலை மாற்றும் வைபவம் நடந்தது. 7.01 மணிக்கு லாலா சத்திரம் மண்டகப்படியிலிருந்து 7.03 மணிக்கு இந்து சமய அறநிலையத் துறை மண்டகப்படிக்கு எழுந்தருளினார். அங்கு பூக்கள் தூவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

* மதுரை மாநகரின் வடகரை, தென்கரை பகுதியில் பல்வேறு இடங்களில் பொங்கல், கேசரி, புளியோதரை, எலுமிச்சை சாதம் ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கள்ளழகர், கருப்பணசாமி வேடமிட்டு, திரி எடுத்து ஆடினர்.

* ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உட்பட தென் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் நேர்த்திக் கடனாக வைகை ஆறு, யானைக்கல் பாலப் பகுதியில் முடி காணிக்கை செலுத்தினர்.

x