வீரபாண்டி திருவிழா நாளை ஊர்ப் பொங்கலுடன் நிறைவு: பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு


படங்கள்: என்.கணேஷ்ராஜ்

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா நாளை ஊர்ப் பொங்கலுடன் நிறைவு பெற உள்ளது. இரவு நேரங்களில் ராட்டினம் உள்ளிட்ட பொழுது அம்சங்கள் முழுவீச்சில் செயல்படுவதால் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 24 மணி நேரமும் நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் இரவும், பகலும் நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர். பக்தர்களுக்காக தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாலை (மே 12) தேர் நிலைக்கு வருகிறது.

இதனிடையே, நாளை ஊர்ப் பொங்கலுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது. இதன் காரணமாக பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் ராட்டினம், சர்க்கஸ், சாகச கிணறு உள்ளிட்ட பல்வேறு பொழுதுப்போக்கு அம்சங்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. இதனால் மாலையில் இருந்து அதிகாலை வரை கூட்ட நெரிசல் அளவுக்கு அதிகமாக உள்ளது.

காவல் துறை சார்பில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவிழா நேரம் என்பதால், தேனி மாவட்டத்தில் பொது போக்குவரத்து, ஹோட்டல் உள்ளிட்டவையின் வர்த்தகங்கள் அதிகரித்துள்ளன.

x