அரியலூர்: அரியலூர் ஒப்பில்லாதம்மன் கோயில் தேரோட்டம் 83 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (மே 12) நடைபெற்றது.
அரியலூர் நகரில் அமைந்துள்ள ஒப்பில்லாதம்மன் கோயிலுக்கு கடந்த 1926-ம் ஆண்டு புதிய தேர் செய்யப்பட்டது. இதையடுத்து, 1942-ம் ஆண்டு ஒரு வாரம் நடைபெற்ற அக்கோயில் திருவிழாவின் போது, தேரோட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் தேரோட்டம் நடைபெறுவது பல்வேறு காரணங்களால் தடைப்பட்டது.
இந்நிலையில், தேரோட்டத்தை நடத்த அக்கோயில் சமஸ்தானம், குல தெய்வ வழிபாடு மக்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் முடிவெடுத்த நிலையில், கடந்த பிப்.2-ம் தேதி அந்த தேர் சீரமைக்கும் பணிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து, தேர் சீரமைக்கும் பணிகளும், வண்ணம் பூசும் பணிகளும் நடைபெற்றன. ஏப்.7-ம் தேதி தேர் வெள்ளேட்டம் நிகழ்வு நடைபெற்றது.
தொடர்ந்து, மே 2-ம் தேதி தேர்திருவிழாவையொட்டி பந்தல்கால் நடும் நிகழ்வு கோயில் வளாகத்தில் நடைபெற்றது. அதன்பின் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், வீதியுலாவும் நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நாளான தேரோட்டம் இன்று (மே 12) காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது, பொன்னுசாமி அரண்மனைத் தெரு, கைலாசநாதர் கோயில் தெரு, பெரிய அரண்மனைத் தெரு, ஒப்பில்லாதம்மன் கோயில் தெரு வழியாக சென்று நிலையை அடைந்தது. தொடர்ந்து, கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.