தமிழ் வழியில் பயின்றோருக்கு குரூப் 1 தேர்வு எழுத வயது வரம்பு அதிகரிக்கப்படுமா? - மாணவர்கள் எதிர்பார்ப்பு


புதுக்கோட்டை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படும் குரூப் 1 தேர்வு மூலம் முக்கிய பணிகளுக்கு பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இத்தேர்வை எழுதுவதற்கான வயது வரம்பு 39 என்று உள்ளது.

ஆனால், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் 45 வயது முதல் 49 வயது வரை எழுதலாம் என்று உள்ளது. எனவே, தமிழகத்திலும் குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை குறைந்தது 5 ஆண்டுகள் அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு தயாராகி வரும் மாணவி எஸ்.வினோதா கூறியது: தமிழ் வழியில் பட்டப்படிப்பு படித்தோருக்கு அரசுப் பணியில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி, 2010-ல் தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், ஆங்கில வழியில் பள்ளி படிப்பையும், பட்டப்படிப்பையும் படித்துவிட்டு, இடஒதுக்கீடு பெற வேண்டும் என்பதற்காக தமிழ் வழியில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பையும் முடித்துவிட்டு, ஆங்கிலத்தில் குரூப் 1 தேர்வை எழுதி பலர் அரசு வேலைவாய்ப்புகளை பெற்று வந்துள்ளனர்.

இதனால், பள்ளியில் இருந்து தொடர்ந்து தமிழ் வழியில் படித்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, 1-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தான் இடஒதுக்கீடு வழங்கப்படும் என 2021-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணை கடந்த 4 ஆண்டுகளாகத்தான் பின்பற்றப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பு இந்த நடைமுறை இல்லாததால், தொடக்கக்கல்வி முதல் தமிழ்வழியில் படித்தோர் அரசு வேலைக்கு செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால், தேர்வு எழுதும் வயது வரம்பும் கடந்து விட்டது. இந்த தேர்வுக்கு குறைந்த பணியிடங்களே ஒதுக்கப்படுகின்றன. எனவே, 40 வயதைக் கடந்து குரூப் 1 தேர்வுக்கு தயாராகி வரும் கிராமப்புறத்தைச் சேர்ந்தோரின் நலனைக் கருத்தில் கொண்டு, 1-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தோருக்கு தேர்வு எழுதும் வயது வரம்பை குறைந்தது 5 ஆண்டுகள் உயர்த்தி வழங்க வேண்டும்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 1 தேர்வுக்கே புதிய உத்தரவு அமலாகும் வகையில், ஏப்.15-ம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற உள்ள மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையில் இதற்கான அறிவிப்பை வெளியிடச் செய்ய வேண்டும். இதுகுறித்து தமிழக அரசின் கவனத்துக்கு இக்கோரிக்கையை கொண்டு சென்றுள்ளோம் என்றார்.

x