அமெரிக்க வரி யுத்தம் தாக்கம்: இந்தியாவுக்கு அதிரடி சலுகை தரும் சீன உற்பத்தி நிறுவனங்கள்!


புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வரி யுத்தத்துக்கு மத்தியில் சீன தேசத்தை சேர்ந்த மின்னணு உற்பத்தி நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுக்கு சலுகை விலையில் பொருட்களை வழங்க முன்வந்துள்ளன. வரி சார்ந்த அச்சுறுத்தல் காரணமாக சீன தேச உற்பத்தியாளர்கள் இந்த நகர்வை முன்னெடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு எதிராக சீனாவும் அமெரிக்க நாட்டு பொருட்களுக்கு வரியை அதிகரித்தது. 34 சதவிதம் மற்றும் 84 சதவிதம் என அமெரிக்க பொருட்கள் மீதான வரியை சீனா உயர்த்தியது. இதற்கு பதிலடியாக 125 சதவிதம் சீன பொருட்களுக்கு வரி வசூலிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

இந்த வரி காரணமாக சீனாவில் உற்பத்தியாகும் மின்னணு பொருட்களின் தேவை வெகுவாக குறைந்துள்ளது. மேலும், புதிய ஆர்டர்களும் இந்த பிரிவில் இல்லை என தகவல். இது மின்னணு உதிரி பாக உற்பத்தியாளர்களையும் பாதிக்க செய்துள்ளது. இந்நிலையில், இந்திய மின்னணு உற்பத்தியாளர்களுக்கு 5 சதவிதம் என்ற சலுகையில் தங்கள் தயாரிப்புகளை வழங்க சீன நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி சீன நிறுவனங்கள் தங்கள் லாபத்தை 4 முதல் 7 சதவிதம் குறைத்துள்ளது. அதே நேரத்தில் அந்த பொருட்களை வாங்குவதன் போல 2 முதல் 3 சதவிதம் வரையில் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் லாபம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் வாடிக்கையாளர்களுக்கு இந்திய நிறுவனங்கள் சலுகை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

இந்தியாவில் இறக்குமதியாகும் மின்னணு உற்பத்தி சார்ந்த பொருட்களில் 75 சதவித பங்கினை சீனா கொண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த வகை பொருட்களின் இறக்குமதி இந்தியாவில் வளர்ச்சி பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் 36 சதவிதம் முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது வளர்ச்சி கண்டுள்ளது.

அமெரிக்க ஆர்டர்களை சீனா இழந்து வருகின்ற காரணத்தால் அந்த நாட்டு உற்பத்தியாளர்கள் அதீத அழுத்தத்தில் உள்ளனர். பொருட்களின் விலை சார்ந்து பேச்சுவார்த்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கோத்ரெஜ் குழுமத்தின் வணிக பிரிவை (அப்லையன்ஸ்) தலைவர் கமல் நந்தி கூறியுள்ளார்.

சிப்கள், பிரிண்ட் செய்யப்பட்ட சர்க்யூட் போர்டுகள், கம்ப்ரசர்கள், ஓபன் செல் டெலிவிஷன் பேனல், காப்பர் ட்யூப்கள், பேட்டரி செல் முதலிய மின்னணு உதிரி பாகங்களை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. 2030-ம் ஆண்டில் இந்த அசெம்பிள் மற்றும் உள்நாட்டு உதிரிபாக உற்பத்தி சுமார் 150 பில்லியன் டாலர்களை எட்டியிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் அமெரிக்கா உடனான வரி உயர்வு காரணமாக இந்தியாவுக்கு சலுகை விலையில் பொருட்களை வழங்க முன்வந்துள்ளனர் சீன உற்பத்தியாளர்கள்.

x