நகைக்கடன் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளும் தங்களது கோரிக்கையை மனுவாக ரிசர்வ் வங்கிக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தங்களது நகைகளை அடமானம் வைக்கும் விவசாயிகள், ஆண்டுக்கு ஒருமுறை அந்த நகைகளை மீட்க முடியாவிட்டாலும், அதற்குரிய வட்டியை கட்டிவிட்டு நகைக் கடனை புதுப்பித்துக் கொள்வர். கடந்தாண்டு வரை வழக்கமா க இருந்த இந்த நடைமுறையை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. அதன்படி, நகைக்கடனை வட்டி மட்டுமே கட்டி தொடர முடியாது. ஆண்டுக்கு ஒரு முறை நகையை கட்டாயமாக திருப்பிக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு நகையை வைத்து புதிய கடனை பெற்றுக்கொள்ளலாம்' என்ற விதியை கொண்டு வந்தது. இதனால், வங்கிகளில் நகையை அடகு வைத்துள்ள தமிழக விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சிறுகுறு விவசாயிகள், முழுப் பணத்தை செலுத்தி தங்களது நகைகளை மீட்க முடியாமல், நகைகளை இழந்து வருகின்றனர்.
இந்நிலையில், பாரதிய கிஸான் சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் டி.பெருமாள், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவு க்கு இ-மெயில் மூலம் அனுப்பியுள்ள கடிதத்தில், "தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், பயிர் சாகுபடிகளுக்காக விவசாய நகைக் கடனை பெறும் விவசாயிகள், அறுவடைக்குப் பிறகு முழுமையாக, கடனை திருப்பிச் செலுத்தி, நகைகளை மீட்டு வந்தனர். மகசூல் இழப்பு, குறைந்த விலை மற்றும் இயற்கை பேரிடர் உள்ளிட்ட காரணங்களால், வேளாண் நகை கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால், வட்டியை மட்டும் திருப்பிச் செலுத்துவர்.
அடுத்த சாகுபடியில் நல்ல அறுவடை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கடனை நீட்டித்துக் கொள்வர். இந்நிலையில், நகைக்கடன் பரிமாற்றத்தில் ரிசர்வ் வங்கி அண்மையில் செய்த மாற்றங்களால் விவசாயிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, உண்மையான விவசாயிகளுக்கும் இச்சலுகையை பயன்படுத்தும் வணிகரீதியிலான நபர்களுக்கும் இடையேயான வேறுபாட்டை வரையறுக்க வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு ஏற்கெனவே இருந்த பழைய முறைப்படியே நகைக்கடனை புதுப்பிக்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும்" என்றார்.
பாரதிய கிஸான் சங்க மாநிலச் செயலாளர் நா.வீரசேகரன் 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: வங்கி நகைக்கடன் விவகாரத்தில், சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் பெருமாள் அனுப்பிய கடிதத்துக்கு பிறகு, 'ஒரு சங்கத்தின் கோரிக்கை மட்டுமல்லாது, இதனால், பாதிக்கப்பட்ட அனைவரும், தங்களது கோரிக்கையை எங்களுக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் இந்த விவகாரத்தில் உரிய முடிவை எடுக்க முடியும்" என்று ரிசர்வ் வங்கி கவர்னர் தரப்பில் இருந்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
எனவே, நகைக்கடன் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளும் தங்களது கோரிக்கையை ரிசர்வ் வங்கிக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். இதை ஒரு இயக்கமாக மாற்றினால் மட்டுமே, நகைக்கடன் விவகாரத்தில் விரைவில் தீர்வை எட்ட முடியும். விவசாயிகள் அஞ்சல் அனுப்ப தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய பாரதிய கிஸான் சங்கம் தயாராக இருக்கிறது. விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை, "சஞ்சய் மல்ஹோத்ரா, மரியாதைக்குரிய ஆளுநர், இந்திய ரிசர்வ் வங்கி, மும்பை" என்ற முகவரிக்கு அனுப்பலாம்' என்றார்.