புதுச்சேரி பிஆர்டிசியில் தற்காலிக ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!  


புதுச்சேரி: புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழகத்தில் (பிஆர்டிசி) தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அதன் பொது மேலாளர்(இயக்கம்) முகமது இஸ்மாயில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பற்றாக்குறையால் தொலைதூர, நகர மற்றும் புறநகர பேருந்துகள் முழு அளவில் இயக்க முடியாமல் கழகத்துக்கு வருவாய் இழப்பும், பயணிகளுக்கு அசவுகரியமும் ஏற்பட்டு வருகிறது.

இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நியமிக்க பிஆர்டிசி கழக நிர்வாகம் முடிவு எடுத்து நடைமுறைபடுத்த உள்ளது. இதற்காக புதுச்சேரி யூனியன் பிரேசத்தில் வசிக்கும் நபர்களிடமிருந்து தற்காலிக அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் நியமனத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தற்காலிக ஓட்டுநருக்கு ரூ.560-ம் தற்காலிக நடத்துநருக்கு ரூ.553-ம் ஊதியமாக 8 மணி நேரப் பணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநருக்கு 1.4.2025 அன்று வயது 25-ல் இருந்து 35-க்குள் இருக்க வேண்டும். நடத்துநருக்கு 1.4.2025 அன்று வயது 25-ல் இருந்து 32-க்குள் இருக்க வேண்டும். அரசின் நெறிமுறைகளின்படி தகுதியான வகுப்பினர்களுக்கு வயது வரம்பு தளர்த்தப்படும்.

ஓட்டுநர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம், இரண்டாண்டு கனரக வாகனம் ஓட்டிய அனுபவ சான்று இருக்க வேண்டும். நடத்துநருக்கு 10-வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நடத்துநர் உரிமம், முதல் உதவி சான்றிதழ், நடத்துநர் உரிமம் பெற்ற பிறகு பேருந்து நிறுவனத்தில் பணிபுரிந்த 6 கால அனுபவ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

ஓட்டுநர் பணிக்கு தகுதித்திறன் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு, நடத்துநர் பணிக்கு தகுதித்திறன் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவர். தற்காலிக ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு விருப்பமுள்ள நபர்கள் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் புதுச்சேரி பணிமனை உதவி பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவத்தைப் பெற்று விண்ணப்பிக்கலாம்.

தற்காலிகப் பணி வழங்கப்படும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு 40 பணி நாட்களுக்கு 10 தினங்கள் பணிநிறுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பணி ஒருமுறை அமர்த்தப்படுவார்கள். தற்காலிக பணி வழங்கப்படும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அதிகப்பட்சமாக 180 பணிகள் மட்டுமே வழங்கப்படும். தற்காலிகப் பணி வழங்கப்படும் ஓட்டுநர், நடத்துநர்கள் எதிர்காலத்தில் பணி நிரந்தரம் உட்பட எந்தவித பணி பலன்கள் கோருவதற்கு எவ்வித உரிமையும் இல்லை என அறிவிக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

x