ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தை அதிகமாக அழும்போது, அது எதற்காக அழுகிறது, என்ன செய்தால் அழுகை நிற்கும் எனத் தெரியாமல் திகைக்கிற தாய்மார்தான் அதிகம். குழந்தை பசிக்காகத்தான் அழுகிறது என்பது பல தாய்மாரின் முதன்மைக் கணிப்பு. இது பெரும்பாலும் உண்மைதான் என்றாலும், பசியையும் தாண்டிப் பல காரணங்களால் குழந்தை அழக்கூடும்.
குழந்தைகளின் அழுகைக்கான காரணங்கள்:
பசி: குழந்தை போதிய அளவு பால் குடித்த பின்னர், இரண்டு மணி நேரத்துக்குள் அழுதால், அது நிச்சயம் பசிக்காக இருக்காது. வேறு காரணத்தால் அது அழக்கூடும். பசிக்கு அடுத்தபடியாகத் தாகம் எடுத்தால் குழந்தை அழும். உதாரணமாக, திட உணவு சாப்பிடும் குழந்தைக்குச் சில தாய்மார் உணவைக் கெட்டியாகப் பிசைந்து கொடுத்துவிடுவார்கள். இதனால் உணவு விக்கிக்கொள்ளும். குழந்தைக்குத் தாகம் எடுக்கும்.
இயற்கை உபாதை: பால் குடித்த பிறகு சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றால் உள்ளாடை, படுக்கை போன்றவை ஈரமாகி விடும்போது, அதைத் தெரியப்படுத்தவும் குழந்தை அழும். குழந்தை இரவில் அழுவதற்குப் பெரும்பாலும், இதுதான் காரணமாக இருக்கும். ஈரமான துணியை மாற்றிவிட்டால் அழுகை நிற்கும்.
ஆடைகளில் கவனம்: அதிகக் கனமான ஆடைகள், இறுக்கமான ஆடைகள், உறுத்துகிற ஆடைகள் மற்றும் கால் கொலுசு, கழுத்து செயின், இடுப்பு ஆபரணங்கள் ஆகியவற்றாலும் குழந்தை அடிக்கடி அழலாம். `டயபர்’ என்பது அவசரத் தேவைக்கு என்பது போய், இப்போது எந்த நேரமும் அணிவிக்கப்படும் ஓர் உள்ளாடையாக அது மாறிவிட்டது. இதனால் ஒவ்வாமை ஏற்பட்டு, குழந்தைக்கு அரிப்பும் தடிப்பும் உண்டாகின்றன. இதன் காரணமாகவும் குழந்தைகள் அடிக்கடி அழுவதுண்டு.
பூச்சி கடி: தன்னுடைய உடலில் ஏதேனும் புதிதாக ஊர்வது போல் உணர்ந்தால், அப்போது குழந்தை அழலாம். எறும்பு, கொசு, பூச்சி, பேன் கடித்தாலோ, சருமம் அரித்தாலோ குழந்தை அழும்.
வயிற்று வலி – காது வலி: குழந்தைக்கு வயிற்று வலியும் காது வலியும் ஏற்படுவது மிகவும் சகஜம். குழந்தை தன்னுடைய தொடையை வயிற்றில் மடித்து வைத்துக்கொண்டு அழுதால், அதற்கு வயிற்றில் வலி இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.
குழந்தைக்கு அளவுக்கு அதிகமாகப் பால் அல்லது திட உணவைக் கொடுத்துவிட்டால், வயிறு உப்பி அழ ஆரம்பிக்கும். இதுபோல் உணவுடன் அதிகக் காற்று வயிற்றுக்குள் சென்றுவிட்டாலும், குழந்தை அழும். தாய்ப்பால் கொடுத்து முடித்தவுடன், ஒவ்வொரு முறையும் குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு அதன் முதுகைத் தட்டிக் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தையின் வயிறு தாயின் தோளில் அழுந்திக் காற்று வெளியேறிவிடும். குழந்தையும் அழுவதை நிறுத்திவிடும்.
காதின் உட்பகுதியில் செவிப்பறைக்குப் பின்னால் சீழ் இருக்கும்போது குழந்தைக்குக் காது வலிக்கும். அப்போது காதுப் பகுதியைத் தொட்டால், அதிகமாக அழும். செவிப்பறையில் சீழின் அழுத்தம் அதிகமாகி அதில் துளை விழுந்து, வெளிக்காதின் வழியாகச் சீழ் வடிந்துவிட்டது என்றால், காது வலி குறைந்துவிடும். இதன் பிறகு குழந்தை அழாது.
சளி, ஜலதோஷம், வயிற்றுப்போக்கு: சளி, மூக்கு ஒழுகல், மூக்கு அடைப்பு, காய்ச்சல், தலைவலி, உடல் வலி, இளைப்பு, நெஞ்சில் வலி, சிறுநீர்க் கடுப்பு, மலச் சிக்கல், வாந்தி போன்ற காரணங்களாலும் குழந்தை அழக்கூடும். இந்த மாதிரி நேரங்களில் குழந்தை பால் குடிக்காது; தொடர்ந்து அழுவது, வீறிட்டு அழுவது, உடலை முறுக்கி அழுவது என்று அழுகைச் சத்தம் வேறுபடும். பால் பற்கள் ஒவ்வொன்றாக முளைக்கத் தொடங்கும்போது குழந்தை அழும். சில மருந்துகளின் பக்க விளைவால் வயிற்றைப் புரட்டும்; வாந்தி வருவது போலிருக்கும். இதனாலும் குழந்தை அழலாம்.
களைப்பு: குழந்தை தொடர்ச்சியாக அழுவதற்குக் களைப்பு ஒரு முக்கியக் காரணம். எந்த நேரமும் குழந்தையைத் தூக்கிவைத்துக் கொஞ்சுவது, விளையாடுவது, தொட்டிலில் போட்டு ஆட்டுவது, உறவினர் படையெடுப்பு போன்றவற்றால் குழந்தை களைத்துவிடும். இதனாலும் அழும். இந்தப் பழக்கங்களைக் குறைத்துக்கொண்டால் குழந்தை அழுவதும் குறையும். குழந்தைக்கு உறக்கம் வந்தால்கூட, சிறிது நேரம் அழும். அப்போது தாலாட்டுப் பாடி உறங்க வைப்பதுதான் ஒரே தீர்வு.