திருச்சி: மலைக்கோட்டை மாநகரம் என்று போற்றப்படக்கூடிய திருச்சி மாநகரம், 1866-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி நகராட்சியானது. 128 ஆண்டுகளுக்கு பிறகு, 1994-ம் ஆண்டில், அருகில் இருந்த ரங்கம், பொன்மலை நகராட்சிகள், கோ.அபிஷேகபுரம், அரியமங்கலம் பேரூராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக உருவெடுத்தது.
நிர்வாக வசதிக்காக, ஸ்ரீரங்கம், பொன்மலை, கோ.அபிஷேகபுரம், அரியமங்கலம் என 4 கோட்டங்களாக முதலில் பிரிக்கப்பட்டது. தற்போது, 65 வார்டுகள், 5 மண்டல அலுவலகங்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் மொத்த பரப்பளவான 167.23 சதுர கி.மீ.யில் 3,857 தெருக்களில் 12 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
தற்போது, மாநகராட்சியாகி, 30 ஆண்டுகளான நிலையில், அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கவே போராடி வருகிறது. ஒருபுறம், விருதுகள், வளர்ச்சித் திட்டங்கள் என்றிருந்தாலும், மறுபுறம், அடிப்படை வசதிகளுக்கே மக்கள் அல்லாடும் நிலை, திருச்சி மாநகராட்சியில் இருப்பது நிதர்சனம்.
போக்குவரத்து நெரிசல்: மேலும், திருச்சி மாநகரத்தின் பிரதான பி்ரச்சினையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது போக்குவரத்து நெரிசல். அதற்கு குண்டும், குழியுமான சாலைகள் காரணம் என்றாலும், அதன் பின்னணியில் இருப்பது, ஆமை வேகத்தில் நடக்கும் புதைவடிகால் பணிகள் என்கின்றனர் திருச்சி மக்கள். பழைய சாலைகள், புதிய சாலைகள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் சாலைகள் உடைபடுவதற்கு புதைவடிகால் பணிகளே பிரதான காரணமாக உள்ளன. இதுவே, ஆங்காங்கே சாக்கடைகள் தேங்கி நிற்க முக்கிய காரணமாகின்றன. குப்பையின் புகலிடமாக இந்த இடங்கள் மாறி போய்விடுகின்றன.
குறிப்பாக, மாநகராட்சிக்கு சொந்தமான மாரீஸ் மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நகர்வதால், சத்திரம் பேருந்து நிலையம், மலைக்கோட்டை தெப்பக்குளம், சிங்காரத் தோப்பு உள்ளிட்ட பிரதான கடைவீதிகளுக்கு வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசலுக்கு மாரீஸ் பாலம் ஒரு காரணமாக இருந்தாலும், காந்தி மார்க்கெட் தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை போக்குவரத்து நெரிசலுக்கான நிரந்தர தீர்வுகள் எதுவும் எட்டப்படவில்லை. புதைவடிகால் பணி, குடிநீர் வசதி, சாலை விரிவாக்கம் என்று தொடரும் மாநகராட்சியின் அலட்சியப் பணிகளே மாநகர நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
2 பணிகள் முடிந்தால் பிரச்சினை தீரும்: திருச்சி மாநகராட்சி ஆணையர் வி.சரவணன், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: திருச்சி மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டிப் பகுதியில் சாலையின் குறுக்கே தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டுவிட்டது. மாநகர காவல் துறையுடன் இணைந்து அடுத்த வாரத்தில் ஒரு கூட்டம் நடத்தவிருக்கிறோம். அதில், வரும் காலங்களில் அங்கு நிறுத்தப்படும் லாரிகளை காவல் துறை உதவியுடன் முறைப்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.
மாரீஸ் மேம்பாலத்தை பொறுத்தவரை, ரயில்வே துறையும், மாநகராட்சியும் இணைந்து செயல்படுத்த வேண்டிய பணி. தற்போது வரை பழைய பாலத்தை ரயில்வே இடித்து தரவில்லை. விரைவாக பழைய பாலத்தை இடித்து தரும்படி ரயில்வே அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இம்மாத இறுதியில் இதற்காக ஒரு கூட்டம் நடக்கவிருக்கிறது. ரயில்வே பழைய பாலத்தை இடித்துக் கொடுத்து விட்டால், 7 மாதங்களுக்குள் மாரீஸ் மேம்பால பணிகளை முடித்துவிடுவோம்.
இந்த 2 பணிகளை முடித்தாலே மாநகரப் பகுதிகளில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும். மற்றபடி, பிரதான சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து புதைவடிகால் பணிகளையும் முடித்துவிட்டோம். குடியிருப்புப் பகுதிகளில் தான் பணிகள் மீதம் இருக்கின்றன. விரைவில் ரூ.80 கோடி மதிப்பில் 4-ம் கட்டமாக தொடங்கவிருக்கும் புதைவடிகால் பணிகள் முழுக்க முழுக்க நகரின் விரிவாக்கப் பகுதிகளில் தான் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.