மதுரை விமான நிலையத்தில் புதிய ‘வான்வழி கட்டுப்பாட்டு கோபுரம்’!


மதுரை விமான நிலையத்தில் விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கும் புதிய வான்வழி கட்டுப்பாட்டு கண்காணிப்பு கோபுரம். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |

மதுரை: மதுரை விமான நிலையத்தில் ரூ.88 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நவீன வசதிகளுடன் கூடிய புதிய ‘வான்வழி கட்டுப்பாட்டு தொழில்நுட்ப கோபுர மையம்’ இன்னும் 3 மாதங்களில் செயல்படத் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மதுரை விமான நிலையம் இன்னும் முழுமையான சர்வதேச விமான நிலையமாக செயல்பட தொடங்காவிட்டாலும் இங்கிருந்து சென்னை, பெங்களுரூ, ஹைதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், துபாய், சிங்கப்பூர், கொழும்பு போன்ற வெளிநாட்டு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. சமீபத்தில் தினசரி பின்னிரவு நேர விமான சேவையும் தொடங்கப்பட்டதால் தற்போது இரவு 11 மணி வரை மதுரை விமான நிலையம் இயங்குகிறது. இதனால் இதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேம்படுத்தப்படும் விமான நிலையம்: நிலம் கையகப்படுத்துதல் பணிகளில் நிலவும் பல ஆண்டு தாமதத்தால் மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகள் மட்டும் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளன. ஆனால் விமான நிலையத்தை மேம்படுத்தும் வகையிலும் கூடுதல் விமானங்களை கையாளத் தேவையான நவீன வசதிகளை ஏற்படுத்தும் பணிகளும் சில ஆண்டுகளாகவே நடந்து வருகின்றன. தற்போது உள்ள 502 ஏக்கரில் இருந்து 633 ஏக்கராக விமான நிலைய பரப்பளவு விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக புதிய சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளும் பெருமளவு நிறைவடைந்துள்ளன. விமானங்கள் விரைவாக ஓடுதளத்தை அடையவும், வெளியேறும் வகையிலும் புதிதாக நீளமான 'டாக்ஸி வே' அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை விமான நிலைய மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக புதிய வான்வழிக் கட்டுப்பாட்டு கோபுரம் (ஏடிசி டவர்) அமைக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. இதன் மூலம் விமான நிலையத்தில் விமானங்கள் சரியான நேரத்தில் தரையிறங்குவது, புறப்படுவதை எளிதாகவும், துல்லியமாக கையாளும் வகையில் நவீன வசதிகளுடன் இந்த புதிய வான்வழி கட்டுப்பாடு தொழில்நுட்ப கோபுரம் சுமார் ரூ.88 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது. சுமார் 44.9 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் இக்கட்டிடம் 7 மாடிகளை கொண்டது. இதில் 4 மாடிகள் கட்டிடமாகவும், 3 மாடிகள் கோபுரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் 2020-ல் தயாரிக்கப்பட்டு, 2021-ல் ஒப்பந்தம் கோரப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2 ஆண்டுக்குள் பணிகளை முடித்து செயல்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூலையில் கட்டுமானப் பகுதியில் நேர்ந்த திடீர் தீ விபத்தால் பணியில் சிறிது தாமதம் ஏற்பட்டது. தற்போது பெரும்பாலான பணிகள் முடிவுற்றதால் இன்னும் ஓரிரு மாதங்களில் இம்மையம் செயல்படத் தொடங்கும் என விமான நிலையத் தரப்பில் கூறப்படுகிறது.

கூடுதல் வசதிகள்: இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு விமான நிலையத்திலும் உள்ள விமானங்களை கையாளும் கட்டுப்பாட்டு மையம் என்பது விமான நிலையம், பாதுகாப்பு, பராமரிப்பு, தகவல் தொடர்பு மற்றும் பிற விமான நிலைய செயல்பாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு பணியை செய்கிறது. மதுரை விமான நிலையத்தில் ஏற்கெனவே கட்டுப்பாடு மையம் இருந்தபோதிலும், தற்போது கூடுதல் வசதிகளுடன் அதிக விமானங்களை பாதுகாப்புடன், விரைந்து கையாளும்விதமாக புதிய ‘ஏர்போர்ட் டிராபிக் கன்ட்ரோல்’ டவர் அமைக்கப்படுகிறது.

இதன் மூலம் முன்பைவிட விமானங்கள் வருகை, புறப்பாடுகளை துல்லியமாக கையாள முடியும். விமானங்களின் இயக்கத்தை 3 திசைகளிலும்
(3 டைமண்ட்ஸ் வியூ) நன்றாக கண்காணிக்கலாம். இதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படும். அதிக விமானங்களை விரைவாக கையாளுவதிலும் சிரமம் இருக்காது. இக்கோபுரத்தில் இன்னும் 3 மாதங்களில் அனைத்து பணிகளும் நிறைவுபெற்று செயல்பாட்டுக்கு வரும்’ என்று கூறினர்.

x