தஞ்சாவூா்: தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெல் பயிர்கள் தற்போது அறுவடைக்கு வந்துள்ள நிலையில், நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படாததால் தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நிகழாண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் வழக்கம்போல ஜூன் 12-ம் தேதி பாசனத்துக்கு அணை திறக்கப்படாமல், ஜூலை 28-ம் தேதி திறக்கப்பட்டது.
அதேவேளையில், ஆக.15-ம் தேதிக்கு பிறகு சாகுபடி பணியைத் தொடங்கினால் வடகிழக்கு பருவமழை பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்ற வேளாண் வல்லுநர் குழு ஆலோசனையின்படி, டெல்டா மாவட்ட விவசாயிகள் பலரும் ஆகஸ்ட் 2-வது வாரத்தில் நாற்றுவிட்டு நடவு செய்யத் தொடங்கினர். அவ்வாறு நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள், தற்போது அறுவடைக்கு வந்துள்ளன.
மழைக்கு முன்பு அறுவடை: குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டாரத்தில் பஞ்சநதிக்கோட்டை, கா.தெக்கூர், கருக்காக்கோட்டை, தஞ்சாவூர் வட்டாரத்தில் அருள்மொழிப்பேட்டை, வல்லுண்டாம்பட்டு உள்ளிட்ட இடங்களில் சம்பா நெல் அறுவடை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. டிச.10-ம் தேதிக்கு பிறகு டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மழைக்கு முன்பாக அறுவடையை முடித்து, நெல்லை விற்க விவசாயிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
ஆனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், தனியார் வியாபாரிகளிடம் 62 கிலோ கொண்ட மூட்டை நெல்லை ரூ.1,300 என்ற விலையில் விற்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கா.தெக்கூரைச் சேர்ந்த விவசாயி ரெ.சுந்தரராஜன் கூறியது: கல்லணைக் கால்வாய் பாசனத்தின் மூலம் சம்பா சாகுபடி பணியை ஆகஸ்ட் மாதம் தொடங்கி, தற்போது நெல் அறுவடை செய்யப்படுகிறது. ஆனால், நேரடி நெல் கொள்முதல் நிலையம் எங்கள் பகுதியில் இருந்தும் இதுவரை திறக்கப்படவில்லை. இதற்கு, நெல் வரத்து குறைவாக இருப்பதாக கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூறுகின்றனர். இதனால், வேறு வழியின்றி குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிகளிடம் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
பஞ்சநதிக்கோட்டை கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் சிலர் அறுவடை செய்த நெல்லை குவித்து வைத்து விற்பனை செய்வதற்கு காத்திருக்கின்றனர். அறுவடை நடைபெறும் பகுதிகளில் உடனடியாக கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என்றார். வேளாண் துறையினர் கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் 3.40 லட்சம் ஏக்கரில் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 2.78 லட்சம் ஏக்கர் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒரத்தநாடு, தஞ்சாவூர் வட்டாரங்களில் ஒரு சில இடங்களில் சம்பா நெல் அறுவடை தொடங்கியுள்ளது.
அறுவடை பணிகள், மகசூல் எவ்வளவு என்பது குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது என்றனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியது: விவசாயிகள் நெல்லை கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டு வந்தால், அதை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து இயங்கும் வகையில் நெல் வர வேண்டும் என்றனர்.