தருமபுரி: தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே வெள்ளப்பெருக்கின் போது ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்க வேண்டியிருப்பதால் பாலம் கட்டித் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நல்லம்பள்ளி ஒன்றியம் கம்மம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோணமடுவு காடு அடுத்த சோளியானூர் சேவிக்கொட்டாய் கிராமம், தருமபுரி-சேலம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது.
இந்த கிராமத்துக்குச் செல்லும் வழியில் தொப்பையாறு ஆறு குறுக்கிடுகிறது. ஆற்றில் தண்ணீர் குறைவாக செல்லும் காலங்களிலும், ஆறு வறண்டு கிடக்கும் காலங்களிலும் இப்பகுதி மக்கள் ஆற்றில் இறங்கி எளிதாகக் கடந்து தங்கள் கிராமத்துக்கு சென்று விடுகின்றனர். ஆனால், மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது ஆற்றைக் கடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தங்கள் பகுதிக்கு பாலம் மற்றும் சாலை அமைத்துத் தர வேண்டுமென இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சேவிக்கொட்டாய் கிராம மக்கள் கூறும்போது, ‘சோளியானூர் சேவிக்கொட்டாய் கிராம மக்கள் தொப்பையாற்றை கடந்துதான் அனைத்து ஊர்களுக்கும் செல்ல வேண்டும். ஆற்றில் மிதமாக தண்ணீர் செல்லும்போது ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மரங்களில் கயிறு கட்டி வைத்து அதன் உதவியுடன் தான் ஆற்றைக் கடக்கிறோம். இவ்வாறு ஆற்றைக் கடந்து செல்ல, நடுவயது உள்ளவர்களே கடும் சிரமப்படுகிறோம். சிறுவர், சிறுமியர், வயது முதிர்ந்தோர், கர்ப்பிணிகள், உடல் நலம் பாதித்தவர்கள் போன்றோர் இவ்வாறு ஆற்றைக் கடப்பது எளிதில்லை.
ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்தில் கடும் அவதிப்படுகிறோம். அதேபோல, ஆற்றைக் கடந்ததும் எங்கள் ஊர்வரை செல்லும் சாலை ஒற்றையடி பாதையாகத் தான் உள்ளது. பாலம் மற்றும் சாலை அமைத்துத் தருமாறு பலரிடமும் பலமுறை கோரிக்கை வைத்து விட்டோம். தேர்தல் நேரத்தில் மட்டும் எங்கள் ஊரை நாடி வருபவர்கள் அதன்பின்னர் கண்டுகொள்வதே இல்லை. இரு மாவட்ட எல்லையில் உள்ளடங்கிக் காணப்படும் எங்கள் கிராமத்தின் தேவைகளை அதிகாரிகளும், அரசும் கண்டுகொள்ளவே இல்லை.
ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்லும் போது யாரேனும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் தான் அதிகாரிகள் திரும்பிப் பார்க்க வேண்டுமா? முன்னதாகவே எங்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தித் தரக் கூடாதா? கோரிக்கை நிறைவேறும் என நீண்ட ஆண்டுகளாக காத்திருக்கிறோம். இம்முறையாவது பாலம் அமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.