எந்தெந்த முறைகளில் நடக்கிறது சைபர் கிரைம் மோசடிகள்? - ஓர் அலர்ட்


கோவை: தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிகரிக்கும் சைபர் கிரைம் மோசடிகளில் சிக்காமல் இருக்க, பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் வளர்ந்துவரும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப, அதைப் பயன்படுத்தி நடத்தப்படும் குற்றச் சம்பவங்களும் அதிகரிக்கின்றன. தற்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன் பயன்பாடு உள்ளது. பொருட்களை வாங்கும்போது, நேரடியாக பணம் கொடுத்த சூழல் மாறி, செல்போன் மூலம் ஆன்லைன் வாயிலாக பணப் பரிமாற்றங்கள் அதிகளவில் நடக்கின்றன.

ஆன்லைன் பரிமாற்றங்களை கணினி, செல்போன் உள்ளிட்ட சாதனங்களின் உதவியோடு சரளமாக கையாளத் தெரிந்த மர்மநபர்கள், எங்கோ ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு, நமது வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை, செலவுக்காக வைத்துள்ள பணத்தை நூதனமாக திருடி விடுகின்றனர்.

ஆன்லைனில் வேலை தருவதாக கூறி லிங்க் அனுப்புதல், முதலீடு தொகைக்கு ஏற்ப அதிக பணம் தருவதாக கூறுவது, பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் லாபம் தருவதாக ஆசைகாட்டுவது, பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி செயலி உருவாக்குவது, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக கூறி ‘டிஜிட்டல் அரஸ்ட்’ செய்துள்ளதாக மிரட்டி பணம் பறிப்பு என பல்வேறு நூதன முறைகளில் பணமோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட வர்கள் தினமும் புகார் அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கூறியதாவது: சைபர் கிரைம் மோசடியில் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இணையதளத்தை, தகவல் தொடர்பு சாதனங்களை முறையாக, எச்சரிக்கையுடன் பயன்படுத்துவதே இம்மோசடி களில் சிக்காமல் தப்பிக்க வழி. சைபர் கிரைம் மோசடி தொடர்பாக கோவை மாநகர காவல்துறையில் வார நாட்களில் தினமும் 35 முதல் 40 புகார்கள் வருகின்றன.

வார இறுதிநாட்களில் 25 புகார்கள் வருகின்றன.நடப்பாண்டில் மட்டும் மோசடிகள் தொடர்பாக, 5,500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. 200-க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 30-க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். புகார்கள் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மேலும், சைபர் கிரைம் சார்ந்த குற்றங்கள் என்னென்ன, எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொது மக்களிடம் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் ஏற்படுத்து கிறோம். போலீஸார் யாரும் டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய மாட்டார்கள். எனவே, அதுபோன்று மிரட்டும் நபர்களை நம்பி பணத்தை அனுப்பக்கூடாது. உங்களது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என குறுஞ்செய்தியோ, அழைப்போ வந்தால் உரிய பதில் அளிக்க வேண்டாம்.

முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் வாயிலாக அறிமுகமாகி பார்சல் அனுப்புவதாக கூறினால், நம்ப வேண்டாம். செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போது, தொடர்பு எண்கள், படங்கள் ஆகியவற்றுக்கு தேவையில்லா மல் அனுமதி கொடுக்கக்கூடாது.

வாடிக்கையாளர் சேவை தொடர்பு எண்களை கூகுள் பக்கத்தில் தேடக்கூடாது. சைபர் குற்றம் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். சைபர் குற்றப் புகார்களுக்கு https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

x