ஓசூர்: ஓசூர் பகுதியில் கால்நடைகளுக்கு நோய் பரவி வரும் நிலையில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. ஓசூர், சூளகிரி, தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதி மக்கள் விவசாயத்தை பிரதானத் தொழிலாக செய்து வருகின்றனர். மேலும், சார்புத் தொழிலாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதி விவசாயிகள் ஜெர்சி மற்றும் நாட்டின மாடுகளை வளர்த்து வருகின்றனர். இப்பகுதியில் வளர்க்கும் கலப்பின கால்நடைகளுக்கு தீவனப்புல், பூசா போன்ற தீவனங்கள் வழங்கப்படுகிறது. நாட்டின மாடுகள் மேய்ச்சல் நிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு செல்கின்றன. ஆண்டுதோறும் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்படும்போது, கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில், தற்போது நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக ஓசூர், சூளகிரி, தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைக் கிராமங்களில் மாடுகளுக்கு நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க கிராமங்களில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஓசூர், சூளகிரி, தேன்கனிக் கோட்டை, தளி, மாடக்கல் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறோம். தற்போது, கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் உடல்களில் தடுப்பும், காதுகளில் புண்ணும் ஏற்பட்டு, சீல் வடிகிறது. இதற்கு கால்நடை மருந்தகங்களில் மருந்து இல்லை என கூறுகின்றனர்.
இதனால், தனியார் கால்நடை மருந்தகங்களில் விலை கொடுத்து மருந்துகளை வாங்கிப் பயன்படுத்து கிறோம். மேலும், இந்நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகள் வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்குச் செல்லும்போது, மற்ற கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளுக்கும் இந்நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, ஓசூர் பகுதியில் உள்ள கிராமங்களில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்: கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் இளங்கோவன் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 லட்சத்து 70 ஆயிரம் கால்நடைகள் உள்ளன. தற்போது, மாவட்டம் முழுவதும் பரவலாகக் கால்நடைகளுக்கு தோல் அலர்ஜி நோய் பரவுகிறது. இதை அம்மை நோய் என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்தி வருகிறோம். இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரம் கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்தி உள்ளோம். நோய் பாதிப்பு இருந்தால் உடனடியாக அருகே உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசி போதுமான அளவு இருப்பு உள்ளது. மேலும், கால்நடைகளுக்கு காதில் சீல் வடிதலை தடுக்க சொட்டு மருந்து தற்போது தான் வரத்தொடங்கி உள்ளது. மேலும், கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிக்க 7 நடமாடும் வாகனங்கள் உள்ளன. அஞ்செட்டிக்கு விரைவில் ஒரு வாகனம் வர உள்ளது. அவசர காலத்தில் கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிக்க 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.