தொடர்ந்து மிரட்டும் மழை - ஒரு வாரமாக முடங்கிய நாகை மீனவர்கள்!


நாகை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.

நாகப்பட்டினம்: கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை காரணமாக நேற்று 7-வது நாளாக நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரமடைந்து, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது.

இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நேற்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத் துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலில் கடும் அலை சீற்றம் மற்றும் இடி, மின்னல் ஏற்படக் கூடும் என்பதால் கடலுக்கு சென்ற மீனவர்கள் மீன்வளத் துறை அதிகாரிகளின் உத்தரவை ஏற்று கரை திரும்பி உள்ளனர்.

இந்த கனமழை எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்ட மீனவர்கள் நேற்று 7-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், நம்பியார் நகர், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் ஃபைபர் படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மீனவர்கள் மற்றும் மீன்பிடித் தொழிலைச் சார்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் நாளொன்றுக்கு ரூ.5 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. டிச.1-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று கூறப்படுவதால், அதுவரை கடலுக்கு செல்லவில்லை என்றால் தங்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என்று நாகை மாவட்ட மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

x